
அண்மையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமை தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பள்ளிகள், கல்வி நிலையங்கள் என பல இடங்களில் பள்ளி மாணவிகள் மற்றும் சிறுமியர்கள் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாவது தொடர்பாக புகார்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் மேலும் அதிர்ச்சியை கூட்டியுள்ளது கிருஷ்ணகிரியில் மலைக்கோட்டையில் வைத்து பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம்.
கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்திற்கு பின்புறத்தில் சுமார் 2000 அடி உயரத்தில் மலைக்கோட்டை ஒன்று உள்ளது. மலை மீது தர்கா ஒன்றும் அமைந்துள்ளது. கடந்த 19ஆம் தேதி 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் மலைக்கோட்டை உச்சிக்கு நடந்தே சென்றுள்ளனர். இருவரும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை நான்கு பேர் கொண்ட கும்பல் பார்த்துள்ளனர். மதுபோதையில் இருந்த நான்கு பேரும் இருவரையும் நெருங்கியுள்ளனர். 'என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்' என மிரட்டும் வகையில் பேசி உள்ளனர். உடனடியாக அங்கிருந்து அந்த ஆணும் பெண்ணும் செல்ல முயன்ற நிலையில் ஆணை பிடித்து தாக்கியுள்ளது அந்த போதை கும்பல்.

பின்னர் ஆண் நபரின் ஆடைகளை களைந்து அங்கேயே உட்கார வைத்துள்ளனர். சட்டைப் பையில் வைத்திருந்த 3000 ரூபாய், அவர் அணிந்திருந்த வெள்ளி அரைஞாண் கயிறு ஆகியவற்றையும் அந்த கும்பல் பறித்துள்ளது. பின்னர் அந்தப் பெண் அணிந்திருந்த நகைகளை கழட்டிய அந்த கும்பல் இருவரையும் அடித்து உதைத்து உடைகளை களைந்து இருவரையும் நெருக்கமாக அமரவைத்து வீடியோ எடுத்துள்ளனர். இணையதளத்தில் இந்த வீடியோவை பரப்பி விடுவோம் என இருவரையும் மிரட்டி 7000 ரூபாயை ஜிபே செயலி மூலம் பறித்துள்ளனர். அதன் பிறகு அப்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அதனையும் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். பின்னர் நால்வரும் பைக்கில் தப்பி சென்றனர்.
பாதிக்கப்பட்ட ஆணும் பெண்ணும் ஊர் திரும்பக் கூட பணம் இல்லாமல் மலை அடிவாரத்தைச் சென்றடைந்து அங்கிருந்தவர்களிடம் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை விவரித்துள்ளனர். ஆனால் பயத்தில் போலீசாருக்கு புகார் தெரிவிக்காமல் இருவரும் சொந்த ஊரான திருப்பத்தூருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் சமூக ஆர்வலர் ஒருவரின் மூலமாக இந்த சம்பவம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்புகொண்ட போலீசார் நடந்த அத்தனை விஷயங்களையும் கேட்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மலைக்கோட்டை உச்சியில் சம்பவம் நிகழ்ந்த நாளில் பயன்பாட்டில் இருந்த செல்போன் சிக்னல்களை வைத்து போலீசார் விசாரித்து ஆய்வு செய்தனர். அதேபோல் மலையடிவாரத்தின் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்தும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பதை போலீசார் துப்பு துலக்கினர்.

பணம், நகை பறித்த கலையரசன், அபிஷேக்
இந்த சம்பவத்தில் கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியைச் சேர்ந்த கலையரசன், அபிஷேக் ஆகிய இருவரும் பணம் நகை பறிப்பில் ஈடுபட்டதும், சுரேஷ், நாராயணன் என்ற இருவர் பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. நான்கு பேர் மீதும் ஏற்கனவே ஆறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதில் அபிஷேக், கலையரசன் ஆகிய இருவரும் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட நிலையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சுரேஷ், நாராயணன் இருவரையும் தேடி வந்தனர்.

கூட்டுப் பாலியல் கொடுமையில் ஈடுபட்ட சுரேஷ், நாராயணன்
இவர்கள் இருவரும் பொன்மலைகுட்டை பெருமாள்கோயில் பின்புறத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கிருஷ்ணகிரி டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு, எஸ்ஐ பிரபாகர் ஆகியோர் விரைந்து சென்று இருவரையும் பிடிக்க முயன்றனர். அப்பொழுது மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் போலீசாரை தாக்க முயன்றனர். இதில் குமார் என்ற காவலர் காயமடைந்தார். உடனடியாக போலீசார் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதால் இருவரும் காயத்துடன் பிடிபட்டனர்.

அண்மையில் கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி ஒருவர் மூன்று ஆசியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பூகம்பத்தை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் அதே கிருஷ்ணகிரியில் மலைக்கோட்டை பகுதியில் நடைபெற்ற இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.