Advertisment

“சேலம் இரும்பாலை வர அந்தப் பகுதி மக்கள் செய்த தியாகம் அளவிட முடியாதது..” - ராமதாஸ்

publive-image

Advertisment

“சேலம் இரும்பாலை தமிழ்நாட்டின் அடையாளம், அது தமிழ்நாட்டின் பெருமை. அந்த இரும்பாலை தமிழ்நாட்டிற்கு வர வேண்டும் என்பதற்காக சேலம் பகுதி மக்கள் செய்த தியாகம் அளவிட முடியாதது. அப்பகுதி மக்கள் தங்களின் வாழ்வாதாரமாக விளங்கிய 4,000 ஏக்கர் நிலங்களை, ஒரு ஏக்கர் ரூ.5,000க்கும் குறைவான விலையில் கொடுத்ததால் தான் சேலம் இரும்பாலை உருவானது” என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், அதில் அவர், “சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கான நிதி ஒப்பந்தப்புள்ளிகள் ஜனவரி மாதத்தில் தாக்கல் செய்யப்படக்கூடும் என்று நம்புவதாகவும் மத்திய எஃகு உருக்குத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்திருக்கிறார். சேலம் இரும்பாலைக்குபுத்துயிரூட்டுவதற்குப் பதிலாக அதை விற்பனை செய்ய மத்திய அரசு முயல்வது அதிர்ச்சியளிக்கிறது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட வினாக்களுக்கு விடையளித்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, “சேலம் இரும்பாலை தனியாருக்கு விற்கப்படுவது உறுதி. மத்திய நிதியமைச்சகத்தின் முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மைத் துறையும், இரும்புத்துறை அமைச்சகமும் இதற்காக முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இதற்காக முதலீட்டாளர்களை இரும்பாலைக்கு அழைத்துச் செல்வதற்காக முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால், அதற்கான பாதுகாப்புச் சூழலை மாநில அரசு ஏற்படுத்தித் தரவில்லை. ஆனாலும் அதற்கான நிதி ஒப்பந்தப்புள்ளிகள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று எங்களுக்குத்தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அது ஜனவரி மாதத்தில் ஏதேனும் ஒரு நாளில் நிகழும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார். சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கும் முயற்சிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருவதையே அமைச்சர் சிந்தியாவின் பதில் உணர்த்துகிறது.

Advertisment

இந்திய இரும்பு எஃகு நிறுவனத்திற்குச் சொந்தமான சேலம் இரும்பாலையை விற்பனை செய்வதற்கான முயற்சிகள் கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4-ம் தேதி உலக அளவில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்ட நிலையில், எவரும் ஒப்பந்தப்புள்ளி தாக்கல் செய்ய முன்வரவில்லை. அதன்பின் கொரோனா காரணமாக அந்த முயற்சிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அவற்றை மத்திய அரசு மீண்டும் தொடங்கியுள்ளது.

சேலம் இரும்பாலை தமிழ்நாட்டின் அடையாளம், அது தமிழ்நாட்டின் பெருமை. அந்த இரும்பாலை தமிழ்நாட்டிற்கு வர வேண்டும் என்பதற்காக சேலம் பகுதி மக்கள் செய்த தியாகம் அளவிட முடியாதது. அப்பகுதி மக்கள் தங்களின் வாழ்வாதாரமாக விளங்கிய 4,000 ஏக்கர் நிலங்களை, ஒரு ஏக்கர் ரூ.5,000க்கும் குறைவான விலையில் கொடுத்ததால் தான் சேலம் இரும்பாலை உருவானது. இத்தகைய பின்னணி கொண்ட சேலம் இரும்பாலையை உலகத்தரம் கொண்ட ஆலையாகதரம் உயர்த்துவது தான் அந்த ஆலை அமைவதற்காக சேலம் மக்கள் செய்த தியாகங்களுக்கு மத்திய அரசு செய்யும் பதிலுதவியாகும்.

சேலம் இரும்பாலையில் உற்பத்தியை அதிகரித்து, சிறப்பாகச் சந்தைப்படுத்தினால் நிச்சயம் லாபத்தில் இயக்க முடியும். அந்த நோக்கத்துடன் தான் சூப்பர் இரும்பாலையாக இருக்கும் சேலம் ஆலையை ஒருங்கிணைந்த ஆலையாக நவீனப்படுத்தும்படி கடந்த 17 ஆண்டுகளாக அதன் தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத மத்திய அரசு, “நவீன மயமாக்கல் மற்றும் விரிவுபடுத்துதல் திட்டத்தின் கீழ் இந்த ஆலையில் செயில் நிறுவனம் ரூ.2,200 கோடி முதலீடு செய்தும், 5 ஆண்டுகளாக சேலம் இரும்பு ஆலை தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதனால் தான் ஆலையை தனியார் மயமாக்க அரசு தீர்மானித்திருக்கிறது” என்று மீண்டும், மீண்டும் கூறி வருகிறது.

சேலம் இரும்பாலையை நவீனமயமாக்கி புத்துயிரூட்டுவதற்கான வாய்ப்புகள் ஆயிரம் இருந்தாலும் கூட, அதை தனியார் மயமாக்க வேண்டும் என்று மத்திய அரசு துடித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம், அந்த ஆலைக்குச் சொந்தமான 4000 ஏக்கர் நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்பது தான். மத்திய அரசின் இந்த முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது; அதை தமிழகம் அனுமதிக்காது.

சேலம் இரும்பாலையில் உற்பத்தி செய்யப்படும் இரும்புக்கு உலகின் பல நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. சேலம் இரும்பாலையில் உற்பத்தியை அதிகரித்து, சிறப்பான முறையில் சந்தைப்படுத்தினால் நிச்சயம் லாபத்தில் இயக்க முடியும். இதை உணர்ந்து கொண்டு சேலம் இரும்பாலைக்கு புத்துயிரூட்டி இந்திய இரும்பு எஃகு நிறுவனத்தின் (செயில்) மூலம் பொதுத்துறை நிறுவனமாகவே நடத்த வேண்டும்.

ஒருவேளை சேலம் இரும்பாலைக்கு புத்துயிரூட்ட முடியாது என்றால், அந்த ஆலை அமைந்துள்ள 4000 ஏக்கர் நிலங்களையும் அவற்றை வழங்கிய நில உரிமையாளர்களிடமே அரசு ஒப்படைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Ramadoss Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe