/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2020.jpg)
தேனி அருகே உள்ள பழனிசெட்டியில் அறிஞர் அண்ணா தெருவில் வசிப்பவர் செல்வராஜ். இவர் அதே ஊரில் செல்ஃபோன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவருக்கு சந்தன மாரியம்மாள் என்ற மனைவியும், அஜய் குல்சன், கமல் குல்சன் என்ற மகன்களும் உள்ளனர். அஜய் குல்சன் பி.எஸ்சி. நர்சிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்துவந்தார். இரண்டாவது மகன் கமல் குல்சன், பி.எஸ்சி. நர்சிங் 2வது ஆண்டு படித்துவருகிறார்.
செல்வராஜுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்றபோதிலும் பாதிப்பின் தாக்கம் குறையாமல் மேலும் தீவிரம் அடைந்தது. பாதிப்பு முற்றிய நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்குப் பரிசோதனை செய்தபோது கல்லீரல் செயலிழந்துவிட்டதாகவும் அவருக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் உயிரைக் காப்பாற்றிவிடலாம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். உடனே அஜய் குல்சன் தனது தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய முன்வந்து, தனது முடிவை தாயிடம் கூறினார். ஆனால்அவர், மகனுக்குப் பதில் தானே கல்லீரல் தானம் கொடுப்பதாக தெரிவித்தார். அதன்படி சந்தனமாரியம்மாள் கல்லீரலில் பாதியை எடுத்து அவருடைய கணவருக்குப் பொருத்த டாக்டர்கள் பல்வேறு கட்ட பரிசோதனைகள் செய்தனர். ஆனால், அவர் கல்லீரலைக் கொடுத்தால் அவருக்கு கல்லீரல் மறுவளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும், அதனால் இருவரின் உயிருக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறி டாக்டர்கள் அந்த முடிவை நிராகரித்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_507.jpg)
அதன்பிறகு அஜய் குல்சன் தனது கல்லீரலை தந்தைக்கு தானம் செய்ய விரும்புவதாக டாக்டர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து அவருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் தானம் கொடுப்பதால் அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என தெரியவந்தது. இதையடுத்து வருவாய்த்துறை மூலம் முறையாக அனுமதி பெற்றனர். பின்னர் கடந்த 1½ மாதத்துக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் அஜய் குல்சனின் கல்லீரலில் இருந்து 60 சதவீதம் எடுத்து அவருடைய தந்தைக்குப் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து செல்வராஜ் காப்பாற்றப்பட்டார். தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இருவரும் நலமாக இருந்துவருகிறார்கள்.
இது சம்பந்தமாக அஜய் குல்சனிடம் கேட்டபோது, “எனது தந்தைக்கு மதுபழக்கம் எதுவும் கிடையாது. பல ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அவர் அதிகமாக மருந்துகள் எடுத்துக்கொண்டதால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனது உடலில் இருந்து 60 சதவீதம் கல்லீரல் எடுத்து எனது தந்தைக்குப் பொருத்தப்பட்டது. தற்போது எனக்கு 80 சதவீத கல்லீரல் வளர்ச்சி அடைந்துள்ளது. அறுவை சிகிச்சை முடிந்த 3 மாதங்களுக்குள் முழுமையாக வளர்ச்சி பெற்றுவிடும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். தந்தையின் சிகிச்சைக்கு ரூ. 40 லட்சத்துக்கும் மேல் செலவானது. உறவினர்கள், அப்பாவின் நண்பர்கள் செய்த உதவிகள் அறுவை சிகிச்சையை எளிதாக்கியது. ஆரோக்கியமாக இருக்கும் நபர் கல்லீரலை தானம் செய்வதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. கல்லீரல் தானம் குறித்து மக்களிடம் அதிகம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)