Advertisment

“முதல் வெற்றி; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி” - சு.வெங்கடேசன் எம்.பி

S. Venkatesan thanks Finance Minister for suggesting rbi jewelry loan regulations

தங்க நகைகள் அடமானம் வைப்பதில் ரிசர்வ் வங்கி பல்வேறு புதிய நடைமுறைகளை வெளியிட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும்பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில் அதன் மீது மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும் செயல் என்று திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பலரும் ரிசர்வ் வங்கியின் புதிய நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் இந்த உத்தரவை ஆர்.பி.ஐ. திரும்பப் பெறுமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில் பொதுமக்களின் கருத்துகள் அடிப்படையில் நகைக் கடங்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. சிறிய தொகைக்கு நகைக்கடன் பெறுவோர் பாதிக்கப்படாதவாறு புதிய விதிமுறைகளில் சில பரிந்துரைகளை ஆர்.பி.ஐ.க்கு வழங்கியுள்ளதாக நிதியமைச்சம் தெரிவித்துள்ளது.

Advertisment

இது குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “முதல் வெற்றி; நகைக்கடன் விதிமுறைகள்;ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்திய நிதியமைச்சருக்கு நன்றி. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து ரிசர்வ் வங்கியின் புதிய நகைக் கடன் நகல் விதிமுறைகள் கோடானுகோடி எளிய, நடுத்தர மக்களின் வாழ்வில் பேரிடியாக அமைந்திருப்பதை விரிவான கடிதம் அளித்து தலையீட்டைக் கோரி இருந்தேன். தற்போது நிதி அமைச்சரின் தலையீட்டின் பேரில் நிதித்துறை செயலாளர் ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். உடனடியாக அமலுக்கு வருமென்று அறிவிக்கப்பட்ட புதிய நகைக் கடன் விதிமுறைகள் நிறுத்தப்பட்டுள்ளது. அவசரப்படாமல் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு கொண்டு வருமாறும் கூறப்பட்டு இருப்பது முதல் வெற்றி.

எளிய நகைக் கடன்தாரர்கள் பாதிப்புக்கு ஆளாகாமல் கவனம் கொள்ளவும், ரூ 2 லட்சம் கடனுக்கு கீழான விண்ணப்பதாரர்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள நிபந்தனைகளில் இருந்து விதி விலக்கு அளிக்குமாறும், அவர்களுக்கு கடன்கள் தாமதமின்றி விரைவில் வழங்கப்பட ஆவன செய்யுமாறும், பொது வெளியில் எழுந்துள்ள கவலைகளை கணக்கில் கொண்டும் விதி முறைகளை வகுக்குமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது மக்களின் குரலுக்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றி. எனது கவனத்திற்கு இப் பிரச்சினையை கொண்டு வந்த பொது மக்களின் உணர்வுகளை ஒன்றிய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றேன். நேரில் சந்தித்த போது உறுதி அளித்தபடி உடனடி தலையீட்டை செய்துள்ள நிதியமைச்சருக்கு நன்றி. விதிமுறைகளை இறுதி செய்யும் போது எளிய நடுத்தர மக்களை, சிறு தொழிலகங்கள் - வணிகர்களை - விவசாயிகளை பாதிக்கக் கூடிய எல்லா நிபந்தனைகளையும் மேற்கூறிய அறிவுறுத்தலைகளை கணக்கில் கொண்டு ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுமென்று நம்புகிறேன். கூடுதல் கடன்கள் கிடைப்பதில் தற்போது உள்ள சிரமங்களும் களையப்பட வேண்டுமென்று நிதியமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Nirmala Sitharaman GOLD LOAN su venkatesan RBI
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe