S. Venkatesan condemns Union Minister's speech on Keezhadi issue

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2013 முதல் 2016 வரை மத்திய அரசு சார்பில் முதல் 2 கட்ட அகழாய்வு நடத்தப்பட்டது. இந்த அகழாய்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த அகழாய்வானது தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றன. அதன் பின்னர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்த நிலையில், 3ஆம் கட்ட அகழாய்வை நடத்திய ஸ்ரீராமன், ஏற்கனவே கிடைத்த பொருட்களே கிடைப்பதாக கூறி அகழாய்வை நிறைவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை 4ஆம் கட்ட அகழாய்வை தொடங்கிய நிலையில் தற்போது 10ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதனிடையே முதல் 2 கட்ட அகழாய்வு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட 982 பக்கங்கள் கொண்ட அறிக்கை தொல்லியல்துறை ஆய்வாளர் அமர்நாத் இந்தியத் தொல்லியல் துறைக்கு அனுப்பி வைத்தார். ஆனால், இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை மத்திய தொல்லியல் துறை அதனை பொதுவெளியில் வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கிறது.

Advertisment

இந்த நிலையில் கீழடி முதல் 2 கட்ட அகழாய்வு ஆய்வறிக்கையில் திருத்தம் செய்து மீண்டும் தாக்கல் செய்யுமாறு இந்தியத் தொல்லியல் துறை கடிதம் அனுப்பியிருந்தது. இதற்கு, கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது, ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை என்று இந்தியத் தொல்லியல்துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில் அளித்தார். போதிய ஆய்வு முடிவுகள் வந்தபோதும் அதனை மத்திய அரசு அங்கீகரிக்க மறுக்கிறது என்று தமிழக அரசு குற்றம்சாட்டியது.

S. Venkatesan condemns Union Minister's speech on Keezhadi issue

இதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கலாச்சார துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “கீழடி ஆய்வுகள் குறித்து இன்னும் அதிகமான அறிவியல்பூர்வ முடிவுகள் தெரிய வேண்டியிருக்கின்றன; அறிவியல் பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகரிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு தற்போது கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது.

Advertisment

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி சமஸ்கிருதம்” என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் சொன்ன போது “அறிவியல் ஆதாரம் என்ன?” என்று நாங்கள் கேட்கவில்லை. ஏனென்றால் அப்படி எந்த ஆய்வும் நடைபெறவில்லை. கீழடியின் வரலாறு குறித்து அறிவியல் பூர்வமான நிறுவனங்களால் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்பட்டிருக்கிறது. “அதிகமான அறிவியல் பூர்வமான முடிவுகள் தேவை. அப்பொழுது தான் அங்கீகரிக்க முடியும்” என்று அமைச்சர் சொல்கிறார். கீழடியில் கிடைத்த மாடுகளின் எலும்புகள் ஆய்வுக்கு உட்படுத்த பட்டிருக்கிறது. ஆனால் அந்த மாட்டு கோமியம் இப்பொழுது கிடைக்க வாய்ப்பில்லையாதலால் கூடுதல் ஆய்வுக்கு வாய்ப்பில்லை அமைச்சரே” என்று கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார்.