Skip to main content

எஸ்.எஸ்.பி.பிக்கு மரணமில்லை! காற்று உள்ளவரை நம் செவிக் கிணற்றுக்கு இசைநீர் ஊற்றுவார்! தமிழ்க்கலை இலக்கியப் பேரவை புகழ் வணக்கம்!

Published on 26/09/2020 | Edited on 26/09/2020
s p balasubrahmanyam

 

தமிழ்க்கலை இலக்கியப் பேரவை தலைவர் கவிபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 

தமிழ்த்திரையுலகில் ஐம்பதாண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பாடிவந்த “பாடும் நிலா” பாலு மறைந்துவிட்டார் என்ற செய்தி நமக்கு இதயமே நொருங்கி விட்டதுபோல் ஆகிவிட்டது.

 

தமிழ் – தெலுங்கு – கன்னடம் – மலையாளம் - இந்தி என பல்வேறு மொழிகளில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பாடல் பாடி கின்னஸ் சாதனை படைத்தவர், ஆறுமுறை தேசிய விருது, கணக்கில் அடங்கா பல்வேறு மாநில விருதுகள்! என இசைத்துறையில் வரலாறு படைத்தவர் எஸ்.பி.பி அவர்கள்!

 

எஸ்.பிபி. அவர்கள் பல்வேறு மொழிகளில் பாடியிருந்தாலும் தமிழ்மொழியில் அவர் பாடிய பாடல்கள் தனிச்சிறப்புமிக்கவை; அழகுணர்ச்சி பெற்றவை!  தமிழ்ச்சொற்களை சரியாக உச்சரிக்கும் பாங்கு, தனது குரலின் வழியாக வெளிப்படுத்தும் இசை இலாவக உணர்ச்சி! கவிஞர்களின் வரிகளுக்கு மேலும் உயிரூட்டும் உத்தி ஆகியன எஸ்.பி.பியின் தனிச்சிறப்பாகும்!

 

அவரது தனிப்பாடல்களில், குறிப்பாக தமிழீழம் விடுதலை குறித்தப் பாடல்கள் நூற்றுக் கணக்கானவை!, அது போராட்ட விடுதலை உணர்ச்சியை தட்டியெழுப்பும்! தமிழ் ஈழ விடுதலை ஆதரவு நிலையில்  எஸ்.பிபி இறுதிவரை  உறுதியாக இருந்தார்!  அவரது மறைவு இசைத்துறைக்கு மட்டுமின்றி தமிழுக்கும் தமிழர்க்கும் பேரிழப்பாகும்!

 

2020 ஆம் ஆண்டு ஒரு சோக ஆண்டாகவே மாறிவிட்டது. கொரோனா எனும் கொடுந்தொற்று நம்மிடையே வாழ்ந்த எத்தனையோ ஆளுமைகளை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது. அதில் பாடகர் எஸ்.பிபியும் ஒருவராகி விட்டார் எனும்போது நம்மால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

 

எஸ்.பி.பி.யின் உடல் இம்மண்ணில் புதைந்து போயினும், அவரது இன்னிசைக் குரல் காற்றில் உயிர் வாழ்ந்து கொண்டே இருக்கும். அவரின் மூச்சுக்காற்றுக்கு உடலிலிருந்து பிரிந்தாலும் அவர் மூச்சுவிடாமல் பாடிய பாடல்கள் நம்மோடு மூச்சுவிட்டு கொண்டிருக்கும்! இசைக்கு தொண்டு செய்து கலைஞன் நமக்கு விசையாகவும் திசையாகவும் இருப்பான்! எஸ்.எஸ்.பி.பிக்கு மரணமில்லை! காற்றில் தவழும் பாட்டாக நம்மோடு வாழ்கிறார்! காற்று உள்ளவரை நம் செவிக் கிணற்றுக்கு இசைநீர் ஊற்றுவார்! இவ்வாறு கூறியுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“மன்னிப்பு கேட்க வேண்டும்” - இசையமைப்பாளருக்கு எஸ்.பி.பி. மகன் நோட்டீஸ்

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
SPB al issue sp charan send legal notice to music diector

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் நல்ல விஷயங்களும் கெட்ட விஷயங்களும் அரங்கேறி வருகிறது. ராஷ்மிகா, கஜோல் உள்ளிட்ட நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி சர்ச்சையானது. அதே சமயம் மறைந்த பாடகரின் குரல்களை ஏஐ மூலம் மீண்டும் கொண்டு வந்து பலரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. அந்த வகையில் ஏ.ஆர். ரஹ்மான், லால் சலாம் படத்தில் மறைந்த பின்னணி பாடகர்களான ஷாகுல் ஹமீத் மற்றும் பம்பா பாக்கியா ஆகியோரின் குரல்களை, 'திமிறி எழுடா' பாடலில் பயன்படுத்தியிருந்தார். 

அவர்களின் குரலை ஏ.ஐ. மூலம் பயன்படுத்தியதற்காக, அவர்களின் குடும்பத்தாரிடம் முறையான அனுமதி பெற்றுள்ளோம். மேலும் அதற்குத் தகுந்த சன்மானமும் கொடுத்துள்ளோம் என ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரலை ஏ.ஐ. மூலம் ‘கீடா கோலா’ என்ற தெலுங்கு இசையமைப்பாளர் விவேக் சாகர் பயன்படுத்தியுள்ளார். இதை உறுதி செய்யும் விதமாக ஒரு பேட்டியிலும் அதை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அவர் எஸ்.பி.பி குடும்பத்தாரிடம் முறையாக அனுமதி வாங்கவில்லை என அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி. சரண் அனுப்பியுள்ளார். 

அவர் நோட்டீசில் குறிப்பிட்டிருப்பதாவது, “எந்தவொரு தொழில்நுட்பமும் மனித குலத்திற்கு பயனளிக்க வேண்டுமே தவிர வாழ்வாதாரத்தை பறிக்கக் கூடாது. அவரது குரல் இந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால், இது எங்களிடம் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்படுவது வேதனையான விஷயம். முறையான அனுமதி பெறாமல் எனது தந்தையின் குரலைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். நஷ்ட ஈடு மற்றும் ராயல்டியில் பங்கு வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“எஸ்.பி.பி என்பது பொதுச் சொத்து” - எஸ்.பி.பி. சரண்

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

sp charan about spb

 

இசையுலகில் தனது இனிமையான குரல் மூலம் இன்றும் ரசிகர்கள் மனதில் இருப்பவர் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இன்றுடன் அவர் மறைந்து 3 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அவரது மகன் எஸ்.பி.பி. சரண், திருவள்ளூர் பொன்னேரியில் உள்ள பாலசுப்ரமணியம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். 

 

பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இத்தனை வருஷங்கள் அப்பாவை வாழ வைத்த, அவரது பாடல்கள் மூலம் வாழவைத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. அப்பாவுக்காக நான் என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறேன். அதை முடித்துவிட்டு அரசிடம் போகவுள்ளேன். ரசிகர்களின் ஆசைப்படி அரசாங்கம் மணிமண்டபம் கட்டினால் நல்லது தான். நேரடியாக அரசிடம் போய், மணிமண்டபத்துக்கு தொகை கொடுங்க என்று நான் கேட்பது சரியாக இருக்காது" என்றார். 

 

அப்போது எஸ்.பி.பியின் பாடல்களை அரசுடைமையாக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "எங்கிட்டே அப்படி யாரும் சொன்னதில்லை. அதெல்லாம் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் பாடலாம். எஸ்.பி.பி என்பது பொதுச் சொத்து. எல்லாரும் கேட்டு மகிழுங்கள்" என்றார்.