Advertisment

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டம்

Rural development department officers struggle

Advertisment

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நான்கு கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளார்கள். அதன்படி கடந்த 19ஆம் தேதி அவரவர் அலுவலகங்களில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். அடுத்து 23 மற்றும் 24ஆம் தேதிகளில் அலுவலகத்திற்கு வராமல் ஒரு மணி நேர வெளிநடப்பு போராட்டம் செய்தனர்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தலைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலராக பணிபுரிந்த 45 வயது முத்தான் என்பவர் 24ஆம் தேதி அலுவலகத்தில் பணியில் இருந்த போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு தாளவாடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் இறந்தார். முத்தான் பணி சுமை காரணமாகவே இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம், முழுவதும் பணிபுரியும் 700க்கும் மேற்பட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 26ஆம் தேதி ஒரு நாள் பணியை புறக்கணித்து அந்தந்த வட்டார அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது தளத்தில் இயங்கும் ஊராட்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அச்சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் பாஸ்கர் பாபு, மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஊராட்சிச் செயலர் மரணத்திற்கு நீதி வேண்டும் எனவும், ஊழியர்களுக்கு பணி சுமையை ஏற்படுத்தக் கூடாது என்றும் இறந்தவர் குடும்பத்திற்கு உடனடியாக அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என்றும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் எனவும் கூறினார்கள்.

Advertisment

இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, சென்னிமலை, பெருந்துறை, பவானி, அம்மாபேட்டை, அந்தியூர், டி.என்.பாளையம், கோபி, நம்பியூர் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி ஆகிய 14 வட்டாரங்களில் பணிபுரியும் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் அனைவரும் பணியை புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அவர்கள் சார்ந்த பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 225 ஊராட்சி செயலர்களும் பணியை புறக்கணித்துள்ளார்கள்.

Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe