Advertisment

“வதந்தி பரப்புபவர்களை கண்காணிக்க வேண்டும்” - காவலர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

Rumor spreaders should be monitored Chief Minister instructs constables

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கூட்டரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று (17.10.2023) கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “எங்கள் மாவட்டத்தில் போதைப் பொருள் நடமாட்டம் இல்லை என்று ஒவ்வொரு மாவட்ட எஸ்.பி.யும் உறுதி எடுத்து தடுத்துக் காட்ட வேண்டும். ஏனென்றால், இது உங்களது வேலை மட்டுமல்ல. உங்களுடைய கடமை. அடுத்து தமிழ்நாட்டில் அதிகப்படியான உயிரிழப்புகள் சாலை விபத்துகளினால் ஏற்படுகின்றன என்பதை அறியும்போது, எனக்கு மிகுந்த வேதனையும், வருத்தமும் ஏற்படுகிறது. அரசு சார்பில் விபத்துகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், பயணம் செய்வோரின் செயல்பாடு இதில் மிக இன்றியமையாதது. எனவே. பொது மக்களிடையே தொடர்ந்து சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வை காவல்துறையினர் ஏற்படுத்திட வேண்டும். பிற துறையினருடன் இணைந்து, சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

குறிப்பாக, இந்த மூன்று மாவட்டங்களில் வாகன போக்குவரத்து மிக அதிகம் என்பதால். சாலை மேம்பாடு, சமிக்ஞைகள் அமைத்தல், தெரு விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகளையும் மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை பொறுத்தவரை, அவ்வகையான குற்றங்களைத் தடுப்பதற்கும், குறைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக, பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்குபோக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றுத்தருதல், சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்குதல், போக்சோ வழக்குகளைத் தீவிரமாக கண்காணித்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்று தரும் வரை தொடர் கண்காணிப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் நீங்கள் அனைவரும் நேரடியாக கவனம் செலுத்த வேண்டும். அதேபோல், சமூக வலைத்தளங்களின் மூலம் வன்முறை மற்றும் சாதியகருத்துகளையும், வதந்திகளைப் பரப்புபவர்களையும் கண்காணிக்க வேண்டும்.பொய்யான செய்திகள் குறித்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

Advertisment

Rumor spreaders should be monitored Chief Minister instructs constables

இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஆ. அருண், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர. ராகுல்நாத், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் த. பிரபு சங்கர், ஆவடி மாநகர காவல் ஆணையர் கி. சங்கர், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ், காவல்துறை தலைவர் ந. கண்ணன், காவல்துறை துணைத் தலைவர் இரா. பொன்னி, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி. சாய் பிரணீத், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம. சுதாகர், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாகெர்ல சிபாஸ் கல்யாண், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Chengalpattu Meeting
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe