
திருப்பூர் மாவட்டம் கவுண்டநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள உயர்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதாக விஷமிகள் சிலர் வதந்தி பரப்பிய நிலையில் போலீசார் இது குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் கவுண்டநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகளை மர்மநபர்கள் சிலர் கலந்துள்ளதாக வதந்தி ஒன்று கிளம்பியது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டி முன்பு திடீரென திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பான புகார் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் மது போதையில் இளைஞர்கள் சிலர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மேல் பகுதிக்கு சென்று அங்குள்ள அலுமினிய கம்பிகளை திருட முயன்றது தெரிந்தது.இதுகுறித்து நிஷாந்த் என்ற நபரையும், திருமுருகபூண்டி பகுதியைச் சேர்ந்த சஞ்சய் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் இதனை விஷமிகள் சிலர் குடிநீர் தொட்டிகள் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக பொய்யை பரப்பி உள்ளதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.