ADVERTISEMENT

கூட்டுறவு சங்கத் தேர்தலில் ஆளும் கட்சியினர் அராஜகம் - மார்க்சிஸ்ட் கண்டனம்

08:58 PM Mar 26, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

கூட்டுறவு சங்கத்தேர்தலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT


’’கூட்டுறவு அமைப்புகளுக்கு முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கியுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் கூட்டுறவு சங்கங்களில் வேட்புமனு தாக்கல் செய்திட சென்றபோது, ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களைத் தவிர வேறு யாரையும் வேட்பு மனு தாக்கல் செய்திட அனுமதிக்காமல் ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்து வருகின்றனர்.

காவல்துறையினரும் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர்.


உதாரணமாக, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதி அழகியபாண்டியபுரம் உள்ளுர் மீனவர் கூட்டுறவு சங்கத்தில் வேட்புமனு தாக்கல் செய்திட சிஐடியு சங்கத்தை சார்ந்தவர்கள் சென்றபோது, ஆளும் கட்சியினர் கூட்டமாக நின்று தடுத்துவிட்டனர். அங்கிருந்த காவல்துறையினரிடம் புகார் கொடுத்தபோது அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதைப்போலவே, திருச்சி மாவட்டத்தில் தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை பகுதிகளிலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் பகுதியிலும் இதர சில மாவட்டங்களிலும் ஜனநாயக விரோதமாக கூட்டுறவு சங்கங்களை கைப்பற்றிட ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்து வருகின்றனர். வேறு யாரையும் வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்து ஆளுங்கட்சியினரை மட்டும் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிப்பதும், போட்டியின்றி ஆளுங்கட்சியினர் வெற்றிபெற்றதாக அறிவிப்பதும் ஜனநாயக விரோத நடைமுறையாகும். ஆளுங்கட்சியினரின் இந்த அராஜக, வன்முறை செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.


ஆளுங்கட்சியினர் தவிர வேறு யாரிடமும் வேட்பு மனு பெறாமல் ஒருதலைப்பட்சமாக ஆளுங்கட்சியினர் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிப்பதை தடுத்து நிறுத்தி, இத்தகைய கூட்டுறவு சங்கங்களில் அனைத்து தரப்பைச் சார்ந்தவர்களிடமும் வேட்பு மனுக்களைப் பெற்று ஜனநாயகப்பூர்வமாக தேர்தல் நடத்திட வேண்டுமென கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையரையும், தமிழக அரசையும் மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.


’’

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT