Skip to main content

ஆர்.டி.ஒ. அலுவலர்களின் சொத்து விவரங்களை ஆய்வு செய்ய  அதிரடி உத்தரவு

Published on 29/06/2018 | Edited on 29/06/2018
rto

 

தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களின் சொத்து விவரங்களை  ஆய்வு செய்ய  போக்குவரத்து துறைக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் பெற மின்னனு ஓட்டுநர் தேர்வு முறையை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இதற்கு தடை விதிக்க கோரியும், ஓட்டுநர் உரிமம் பெற பழைய முறையை தொடர்ந்து செயல்படுத்த கோரியும் தென்னிந்திய ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், தற்போது முறையாக வாகனம் ஓட்ட தெரியாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இதை முறைப்படுத்த புதிய மின்னனு ஓட்டுநர் உரிமம் தேர்வு முறை அவசியமானது என்றும் அதை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென தெரிவித்தார்.


    
பெரும்பான்மையான மக்கள் ஓட்டுநர் உரிமம் பெற ஓட்டுநர் பள்ளிகளின் மூலம் விண்ணப்பிக்கின்றனர். இதில் பலர்  வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் மூலம் முறைகேடாக ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர். 

 

இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் ஒரு வார காலத்திற்குள் சிசிடிவி காமிரா பொருத்த வேண்டும். வட்டார அலுவலகங்களில்   ஒரு வாரத்திற்கும் மேலாக காமிரா செயல்படாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

 

மேலும், லஞ்ச ஒழிப்பு துறையினர் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்த வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் பயிற்சி பள்ளியை சேர்ந்தவர்கள் அவசியமில்லாமல் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

 

வட்டார போக்குவரத்து அலுவலர்களின் தற்போதுள்ள சொத்து விவரத்தை பெற்று ஆய்வு செய்ய வேண்டும் என போக்குவரத்து துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, 4 வார காலத்திற்குள் வழக்கு குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

அச்சுறுத்தும் ஹாரன்கள்! ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

RTO Inspect in ranipet district

 

ராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் போக்குவரத்து விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பொருத்தியிருந்த 3 தனியார் பேருந்துகளுக்கு தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்த வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தார். 

 

முத்துக்கடை பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 தனியார் பேருந்துகளை நிறுத்தி சோதனை செய்த போது போக்குவரத்து விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக பேருந்து ஓட்டுநர்களை வைத்து அந்த ஏர் ஹாரன்களை கழட்டி அப்புறப்படுத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், விதிமீறல் செய்த பேருந்துகளுக்கு தலா 10,000 ரூபாய் அபராதம் என மொத்தம் 30,000 ரூபாய் அபராதம் விதித்தார்.

 

போக்குவரத்து விதியை மீறி இதுபோன்ற ஏர் ஹாரன் பொருத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், அதே போல் வேகமாக பேருந்துகளை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஓட்டுநர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார்.

 

 

Next Story

45 நிமிட வகுப்பில் பங்கேற்றால் தான் லைசென்ஸ் - வேலூர் ஆர்.டி.ஓ அதிரடி!

Published on 21/06/2019 | Edited on 21/06/2019

வேலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெற வரும் பொதுமக்கள் அவ்வலுவலகத்தில் நடத்தப்படும் 45 நிமிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பில் பங்கேற்க வேண்டும். இந்த வகுப்பில் சாலை விபத்துக்கள் எதனால் ஏற்படுகிறது, சாலைவிதிகள் என்னன்ன? வாகனத்தில் வலது, இடது புறங்களில் திரும்பும்போது எந்த சிக்னல் செய்ய வேண்டும், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடந்த சாலை விபத்துக்களின் வீடியோ தொகுப்பு போன்றவை இங்கு வாய்மொழியாகவும், வீடியோ பதிவாகவும் வகுப்பில் கூறப்படுகின்றன. 

rto

அதில் பங்கேற்று சான்று பெற்றால் தான் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும் என்ற நடைமுறை அமல்படுத்தியுள்ளனர்.  இந்த விழிப்புணர்வு வகுப்பு தமிழகத்திலேயே முதல்முறையாக வேலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 

இதுப்போன்ற வகுப்புகள் ஓட்டுநர் பயிற்சி பெறும் பள்ளியில் எடுத்துரைப்பார்கள் என்பது குறிப்பிடதக்கது. பெரும்பாலான பயிற்சி பள்ளிகள் இதனை கற்றுதராமல் பணம் மட்டும்மே குறிக்கோளாக செயல்படுகின்றன. அதிகாரிகளும் இதுப்பற்றி பெரியளவில் அலட்டிக்கொள்ளாமல் வண்டி ஓட்டிக்காட்டினால் போதும் என்கிற நிலையில் சோதித்துவிட்டு லைசென்ஸ் வழங்கி வந்தனர். 

rto

இதனால், இந்தியாவில் அதிக விபத்து நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. அதில் வேலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் சாலை விபத்துக்களை குறைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே இந்த விழிப்புணர்வு ஏற்பாட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 

இப்படிப்பட்ட விழிப்புணர்வுகள் ஓட்டுநர்களுக்கு கிடைப்பதன் மூலமாக விபத்துக்கள் குறையும் என கணக்கிடப்படுகிறது.