ADVERTISEMENT

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி - உச்சநீதிமன்றம்

11:18 AM Apr 11, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு முழுக்க கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடத்த நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்த நிலையில் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் நீதிமன்றத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாடியது. இதன்பின் பல கட்ட நீதிமன்ற வழக்குகள் மற்றும் விசாரணைகளைத் தாண்டி இறுதியாக 6 இடங்களைத் தவிர 44 இடங்களில், உள் அரங்கில் நடத்திக்கொள்ளலாம் உள்ளிட்ட பலத்த கட்டுப்பாடுகளோடு நிகழ்வை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளை ஏற்காத ஆர்.எஸ்.எஸ். மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு கடந்த பிப். 10ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், சபீக் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தரப்பில், சாலையில் பேரணி நடத்தவே விருப்பம் என தெரிவிக்கப்பட்டது. இதே வழக்கில் காவல்துறை சார்பில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காப்பது தங்கள் கடமை; அதே நேரத்தில் சமூகத்தில் சில பிரச்சனைகள் ஏற்படாமல் தடுப்பது என்ற நோக்கத்தில் தான் அனுமதி மறுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஆர்.எஸ்.எஸ். தரப்பு, ‘காவல்துறையின் விதிமுறைகளைப் பின்பற்றுவதாக’ எனவும் தெரிவித்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். இது தொடர்பான வழக்குகளைத் தள்ளுபடி செய்து ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்தனர். மேலும் யார் மனதையும் புண்படுத்தும் வகையிலும் பாதிக்கும் வகையிலும் கோஷங்களை எழுப்பக்கூடாது என ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்த மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் அதனை முறையாகப் பரிசீலித்து அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழ்நாடு அரசு தரப்பில், ஆர்.எஸ்.எஸ். பேரணி முழுவதுமாக தடை செய்யப்படவில்லை. எங்கெல்லாம் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமோ அங்கு மட்டுமே தடைவிதிக்கப்படுகிறது. மேலும், கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இது மாநில அரசுக்கு உள்ள உரிமை சார்ந்த விஷயம் இதில், நீதிமன்றங்கள் தலையிட முடியாது என வாதிடப்பட்டது.

அதேசமயம், ஆர்.எஸ்.எஸ். தரப்பிலிருந்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடை செய்யப்பட்டதன் காரணமாக அவர்களால் இந்தப் பேரணியில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. பேரணிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது தான் காவல்துறையின் வேலை. அவர்கள் பிரச்சனை செய்வார்கள் ஆதலால் பேரணியை அனுமதிக்க முடியாது என சொல்வதை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 27ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று இந்த வழக்கு குறித்தான தீர்ப்பு வெளியாகியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT