ADVERTISEMENT

விதிகளை மீறிய ஆம்னி பேருந்துகளிடம் ரூ.2.33 லட்சம் அபராதம் வசூல்! 

09:03 AM Nov 05, 2018 | elayaraja

ADVERTISEMENT

சேலத்தில் விதிகளை மீறி இயக்கப்பட்ட சொகுசு பேருந்துகளிடம் இருந்து, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஒரே இரவில் ரூ.2.33 லட்சம் அபராதம் வசூலித்தனர்.

ADVERTISEMENT


தீபாவளி பண்டிகையையொட்டி, வெளியூர்களில் பணியாற்றி வரும் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக, சென்னையில் இருந்து, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர்.


இதற்காக அரசுத்தரப்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், ஒரே நேரத்தில் லட்சகணக்கானோர் பயணிக்கும் நிலையில், பேருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.


இதுபோன்ற விழாக்காலங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், வழக்கத்தைவிட இரண்டு மடங்கு, மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர். கட்டணக் கொள்ளை தொடர்பாக பரவலாக புகார்கள் கிளம்பிய நிலையில், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் கடந்த இரு நாள்களாக ஆம்னி பேருந்துகளை திடீர் தணிக்கை செய்து வருகின்றனர்.


சேலத்தில் நவம்பர் 2ம் தேதி இரவு 7 மணி முதல் 3ம் தேதி காலை 7 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் சிறப்பு சோதனையில் ஈடுபட்டனர். தொப்பூர் சுங்கச்சாவடி, மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி ஆகிய இரு இடங்களில் சோதனை நடந்தது.


வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தாமோதரன் (சேலம் மேற்கு), அங்கமுத்து (சங்ககிரி), செந்தில்வேலன் (தர்மபுரி) ஆகியோர் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள்¢ விஸ்வநாதன், தனபால் (சங்ககிரி), வெங்கடேசன், செந்தில் (சேலம் மேற்கு), அன்புச்செழியன், ராஜாமணி, மணிமாறன், பன்னீர்செல்வம் (தர்மபுரி) ஆகியோர் சிறப்பு ஆம்னி பேருந்துகள் சோதனையில் ஈடுபட்டனர்.


பர்மிட், சாலைவரி, தகுதிச்சான்றிதழ், இன்சூரன்ஸ், கூடுதல் சரக்கேற்றுதல், காற்று ஒலிப்பான், இசை ஒலிப்பான் ஆகிய விதிகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தனர். கூடுதல் கட்டணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர். முக்கிய பாதுகாப்பு அம்சங்களுள் ஒன்றான, வாகனத்தின் பின்புறத்தில், ஒளிரும் சிவப்பு பட்டை ஒட்டப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


இதில், மொத்தம் 417 ஆம்னி பேருந்துகள் சோதனை செய்யப்பட்டன. 93 பேருந்துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. விதிகளை மீறியதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து ஒரே இரவில் ரூ.2.33 லட்சம் அபராதம் (இணக்கக் கட்டணம்) வசூலிக்கப்பட்டது.


போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் கெடுபிடியால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT