Skip to main content

“அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ளே காவல்துறையே போகமுடியாது” - ஆர்.எஸ்.பாரதி

Published on 31/12/2024 | Edited on 31/12/2024
R.S. Bharathi says The police cannot enter Anna University

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர திமுக சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக  அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அதில், “வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும். முதல்வர் ஸ்டாலினை போய் நான் சந்திப்பதா? எனக்கு அவமானமாக உள்ளது என ஒருவர் கூறினார். இன்று அவர்களைப் பார்த்துச் சந்தி சிரிக்கிறது. திமுக மோசமான கட்சி.  திமுகவை பற்றி யார் பேசினாலும் அவர்கள் குடும்பத்தில் கலவரம் வரும், அடிதடி நடக்கும், ஒரு மாதிரியான வித்தியாசமான கட்சி திமுக; அதனால், திமுகவை பழித்துப் பேசாதீர்கள்.

திமுகவை கேவலப்படுத்தலாம் என ஏதேதோ சதி செய்கிறார்கள். எங்கு எது நடந்தாலும் அதை திமுக மீது பழி போடுகிறார்கள். அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கேள்விப்பட்டு முதல்வர் துடிதுடித்து போய்விட்டார். உடனடியாக நடவடிக்கை எடுத்தார். எடப்பாடி பழனிசாமி போராட்டம் நடத்துகிறார் என்றால் அவருக்கு என்ன யோகிதை உள்ளது. பொள்ளாச்சி சம்பவம் அனைவரும் அறிந்ததே அப்போது நடவடிக்கை எடுத்தாரா எடப்பாடி பழனிசாமி? ஆனால் உடனடியாக முதல்வர் 24 மணி நேரத்தில் குற்றவாளியைக் கைது செய்தார்.

ஒருவர் லண்டனில் இருந்து படித்து வந்திருக்கிறார். எல்லாருக்கும் மண்டையில் மூளை இருக்கும். அவருக்கு உடம்பெல்லாம் மூளையாக உள்ளது. என்ன நடந்தது என்று மக்களுக்கு சொல்லணும்? அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமிக்கவில்லை. துணைவேந்தர் தான் பதிவாளர் நியமிக்க வேண்டும். அவர்தான் மற்ற அனைத்தையும் பார்க்க வேண்டும். 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் ரோந்து வாகனம் வந்து கொண்டிருக்க வேண்டும். 

ஆனால் இப்பொழுது ரோந்து வாகனமே இல்லை. காரணம் காவல்துறையும் உள்ளே போக முடியாது. பல்கலைக்கழக அனுமதி இல்லாமல் காவலர்கள் உள்ளே செல்ல முடியாது. ஊழல்தான் நடக்கிறது. துணைவேந்தரை ஆளுநர் நியமிக்கவில்லை. நாங்கள் அறிக்கை விட்ட பின்பு ஆளுநர் தற்போது போய் அங்கு  பார்க்கிறார். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை ஆளுநர் நியமிக்கவில்லை. இந்த ஆட்சிக்கு எப்படியாவது கெட்ட பெயர் உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டு ஒரு சதிக் கூட்டம் நடந்து கொண்டுள்ளது” என்றார்.

சார்ந்த செய்திகள்