Rs 91,000 bill for non-running electricity meter

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியில் வினோத் என்பவர் கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த மே மாதம் அதிக மின்பளு காரணமாக அவரது தொழிற்சாலைக்கான மின் மீட்டர் எரிந்துபோனது.

Advertisment

உடனடியாகக் கருமத்தம்பட்டி பிரிவு மின்வாரிய அலுவலகத்தில் கடிதம் மூலம் புகார் தெரிவித்து, பின்னர் புதிய மின் மீட்டர் பொருத்தினார். இதைத் தொடர்ந்து ஜூலை மாதக் கணக்கீட்டின்போது மின் கணக்கீட்டாளர், முறையாகக் கணக்கெடுப்பு செய்யாமல் ரூ.91,935 எனக் கட்டணத்தைப் பதிவு செய்துள்ளார்.

Advertisment

இந்தக் கட்டணத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த வினோத், ‘கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ்’ அமைப்பின் செயலர் நா.லோகு மூலம் சோமனூர் கோட்ட உதவி செயற்பொறியாளருக்குக் கடிதம் அனுப்பினார். இதையடுத்து, எரிந்துபோன மீட்டரையும் புதிதாகப் பொருத்தப்பட்டுள்ள மீட்டரையும் ஆய்வகத்துக்கு அனுப்பி அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.

அதில் புதிய மின் மீட்டர் முறையாக இயங்கி வருவது தெரியவந்தது. முற்றிலும் எரிந்துபோன மீட்டரை ஆய்வு செய்ய இயலவில்லை. இருப்பினும், மின் கணக்கீட்டாளர் தவறாகக் கணக்கீடு செய்து கட்டணத்தை மின்வாரியக் கணினியில் பதிவேற்றம் செய்தது கண்டறியப்பட்டது.இதையடுத்து, மின் கணக்கீட்டாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறாகக் கணக்கீடு செய்யப்பட்டுக் கூடுதலாக வசூலித்த தொகை வரும் மின் பயன்பாட்டுக் கட்டணத்தில் கழித்துக் கொள்ளப்படும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

Ad

இது தொடர்பாக நா.லோகு கூறும்போது, ''மின்சார ஒழுங்கு ஆணைய விதிப்படி, மின் இணைப்பு தந்த பிறகு மீட்டரில் பழுது ஏற்பட்டால், மீட்டர் பொருத்தப்பட்ட பிறகுள்ள நான்கு மாதங்களில் பயன்படுத்திய மின்சார அளவின் சராசரி அடிப்படையில் மின் அளவைக் கணக்கிட வேண்டும். ஆனால், இதைக் கருத்தில் கொள்ளாமல் கணக்கீட்டாளர் மிகையான கட்டணத்தைப் பதிவு செய்துள்ளார்" என்றார்.