Published on 31/01/2022 | Edited on 31/01/2022

திருச்சி வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், 29ஆம் தேதி துபாயில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு தனியார் விமானத்தில் வந்த பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது விமானத்தில் இருந்து வெளியே வரும் ஏப்ரான் பகுதியில் கேட்பாரற்று ஒரு பார்சல் கிடந்தது. அதனை சுங்கத்துறை அதிகாரிகள் எடுத்து பிரித்துப் பார்த்தபோது பேஸ்ட் வடிவில் 850 கிராம் கடத்தல் தங்கம் இருந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, அது சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தங்கத்தை மறைத்து வைத்த நபர்கள் மற்றும் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.