சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். 

அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இது குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வின் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியும், பிரபல உணவகத்தின் உரிமையாளருமான கோவர்த்தன் ஓட்டுநர் விக்னேஷ் என்பவர் மூலம் தங்க கட்டிகளுக்கு பதிலாக 97.92 லட்சம் ரூபாய் பணத்தை சுராஜ் கைமாற்றியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும் பாஜக நிர்வாகி எஸ்.ஆர்.சேகர், சேகர் கேசவ விநாயகம், கோவர்த்தன் ஆகியோர் நைனார் நாகேந்திரனுக்கு மக்களவை தேர்தலின் போது பணப்பட்டுவாடா செய்ய உதவியது, அதற்கு ஆதாரமாகக் கால் டேட்டா ஆவணம் மூலமாக உறுதியாகியுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.