மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஹவாலா பணம் பரிமாற்றம் நடைபெறுவதாக விளக்குத்தூண் காவல் நிலைய காவலர்களுக்கு ரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் உள்ள மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வாகன நிறுத்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குச் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரை போலீசார் சோதனை செய்தனர். 

அந்த காரில் சுமார் 3 கோடியே 80 லட்சம் ரூபாய் ரொக்க பணம் இருப்பது தெரியவந்தது. இது ஹவாலா பணமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார், மதுரையைச் சேர்ந்த பாபுராவ் பிரம்மாஸ், மகாராஷ்டிராவைச் சேர்ந்த மிட்டல் மற்றும் அஜய் உள்ளிட்ட மொத்தம் 5 பேரை பணத்துடன் விளக்குத்தூண் காவல்நிலைய போலீசார் அவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் 5 பேரும் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தினர். 

இதனையடுத்து இந்த வழக்கு வருமான வரித்துறைக்கு மாற்றப்பட்டது. வருமான வரித்துறை அளித்த தகவலின் அடிப்படையில் போலீசாரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் 5 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணம் எங்கிருந்து வந்தது? யாருக்காக இந்த பணம் எடுத்துச் செல்லப்படுவதாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் வருமான வரித்துறையினரும் போலீசாரும் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரையில் ரூபாய் 3.80 கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.