/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/108_58.jpg)
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள முத்துக்கிருஷ்ணப்பேரி காமராஜ் நகரைச் சேர்ந்தவர் 31 வயதான சங்கர் குமார். இவர் கடந்த ஓராண்டாக முறப்பநாடு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று சங்கர் குமார் பணியில் இருந்த போது, வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் பாலம் சீரமைப்பு பணிக்காக வைக்கப்பட்டிருந்த பேரிக்காட்டில் மோதிய விபத்தில் செய்துங்கநல்லூர் மேலநாட்டார் குளத்தைச் சேர்ந்த ரமேஷ் காயமடைந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலர் சங்கர் குமார் விபத்தில் காயமடைந்த வாலிபர் ரமேஷை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதன்பின் இரவு நேரத்தில் ஆங்காங்கே கிடந்த பேரிகார்ட்டுகளை காவலர் சங்கர் குமார் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் பாலத்தின் மற்றொரு பகுதியில் காவல் அதிகாரி நிற்பதை அறிந்த சங்கர் குமார் விபத்து நடந்த பாலத்தில் இருந்து அதை ஒட்டியுள்ள மற்றொரு பாலத்திற்குச் செல்ல முயன்ற போது இரண்டு பாலத்தின் இடைவெளி வழியாக எதிர்பாராத விதமாக ஆற்றுக்குள் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் காவலர் சங்கர் குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சக காவலர்கள் படுகாயமடைந்த சங்கர் குமாரை மீட்டு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சங்கர் குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முறப்பநாடு காவல் ஆய்வாளர் ஷேக் அப்துல்காதர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் இந்த துயரகரமான செய்தியைக் கேட்டுமிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன். காவலர் சங்கர் குமார் அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். சங்கர் குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)