இடைப்பாடி அருகே, கூட்டுறவு சங்கத்தில் பயிர்க்கடன், நகைக்கடன்கள் வழங்கியதில் 2.93 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதை அடுத்து, அ.தி.மு.க.வைச் சேர்ந்த சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட 10 பேரை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே உள்ள வெள்ளரிவெள்ளியில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கணக்கு தொடங்கி, வர்த்தகம் செய்து வருகின்றனர்.கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு, அ.தி.மு.க. ஆட்சியின்போது பயிர்க்கடன், நகைக்கடன்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் கிளம்பின. இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதில், சங்கத்தின் தலைவரான அ.தி.மு.க.வைச் சேர்ந்த சத்தியபானு, துணைத்தலைவர் வடிவேல், செயலாளர் மோகன், உதவி செயலாளர் மணி, நகை மதிப்பீட்டாளர் ரவிக்குமார், வட்டார ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் உறுப்பினர்கள் ரத்தினம், கலாராணி, பெரியண்ணன் உள்ளிட்ட 13 பேர் 2.93 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இந்த சங்கத்தின் செயலாளர், உதவி செயலாளர் ஆகிய இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த மோசடி புகார் குறித்து, சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் சங்ககிரி சரகத்தின் அப்போதைய கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் முத்துவிஜயா புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில், டி.எஸ்.பி. சீனிவாசன் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி, சங்கத்தின் தலைவர் சத்தியபானு உள்ளிட்ட 13 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் தலைமறைவாகினர். இந்நிலையில், கடந்த மாதம் மோகன் (56), உதவி செயலாளர் மணி (57), வட்டார கள ஆய்வாளர் ஆனந்தகுமார் (56) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.இதற்கிடையே, கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சத்தியபானு, ரத்தினம், கலாராணி, பெரியண்ணன் ஆகிய நான்கு பேரும் முன்பிணை கேட்டு, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களின் மனுவை, ஆக. 25ம் தேதி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து கூட்டுறவு சங்கத் தலைவர் சத்தியபானு உள்ளிட்ட 10 பேரையும் கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.