சென்னை வானகரத்தில் ரூ. 25 லட்சம் மோசடி செய்ததாக பா.ஜ.க. பிரமுகர் ஜானகிராமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வானகரம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவர், உற்பத்தித் துறை சார்ந்த தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் பணியாற்றும் நிறுவனத்தில் இரும்பு கழிவுகள் மொத்தமாகப் பெறப்பட்டு அது வெளி இடங்களுக்கு விற்பது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்த சுகுமார் எனும் நபர், வினோத்துக்கு அறிமுகமாகியுள்ளார். இவரது நண்பர் ஜானகிராமன். ஜானகிராமன், பா.ஜ.க. காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணியின் பொதுச்செயலாளராக உள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு இரும்பு கழிவுகளை விற்பனை செய்து வருவதாக சுகுமார், வினோத்துக்கு தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, ஜானகிராமன், இந்தத் தொழிலில் ஈடுபட்டு பலரையும் கோட்டீஸ்வரராக்கியுள்ளார். அவருடன் தொழில் செய்தால்நாமும் கோட்டீஸ்வரராகலாம் என வினோத்திடம் சுகுமார் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஜானகிராமனுடன் தொழில் செய்வதற்கு வினோத் ஒப்புக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சுகுமார் கூறியதன் அடிப்படையில், வினோத், இரும்பு கழிவுகளைப் பெறுவதற்காக ஜானகிராமன் வங்கிக் கணக்கிற்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார். ஆனால், ஜானகிராமன் கடந்த மூன்று மாதங்களாக இரும்பு கழிவுகளை வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். அதன் பிறகே, தான் ஏமாற்றப்பட்டு இருப்பதை அறிந்த வினோத், மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில், போலீஸார் விசாரித்தபோது சுகுமார் மற்றும் பா.ஜ.க. நிர்வாகி ஜானகிராமன் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இருவரையும் போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.