/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_263.jpg)
தமிழக அரசின் நலத்திட்டங்களைப்பெற, லஞ்சம் கொடுத்தால்தான் பயனாளிகளாகவே தேர்வுசெய்கிறார்கள். யார் லஞ்சம் கொடுத்தாலும் தகுதியற்றவர்களும் பயனாளியாக மாற்றப்படுகிறார்கள். இப்போது தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் என்று பெரிய பதாகையை கட்டி வைத்துக்கொண்டு தலா ரூ.2 ஆயிரம் லஞ்சமாக வசூல்செய்த பிறகே ஆடுகளைக் கொடுத்திருக்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், எம்.உசிலம்பட்டி ஊராட்சி பொதுமக்களுக்கு, கொன்னையூர் சந்தையில் வைத்து விலையில்லா ஆடுகள் வழங்கப்படுவதாகதகவல் கொடுத்த ஊராட்சி நிர்வாகம், வரும்போது ஒவ்வொரு பயனாளிமும் ரூ.2 ஆயிரம் பணம்கொண்டு வரவேண்டும் என்று சொன்னதாகக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-3_16.jpg)
செவ்வாய்க் கிழமை, பயனாளிகள் கொன்னையூர் சந்தை திடலுக்கு வந்தனர். அங்கே ஊராட்சி செயலர் சின்னக்காளையும், பணித்தளப் பொறுப்பாளர் முருகேசனும் பயனாளிகள் பட்டியலோடு காத்திருந்தனர். ஒருவர் வரிசையாக பயனாளிகள் பெயரை வாசிக்க அந்தப் பயனாளி அருகில் ஒரு பையோடு காத்திருந்த மற்றொருவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்ட பிறகு அவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சிறிய ஆட்டுக்குட்டிகள் கொடுக்கப்பட்டது.
பயனாளிகளுக்கு நலத்திட்டம் கொடுக்கும்போது,ஊராட்சி செயலர் லஞ்சம் வாங்குவதை வீடியோ, படம் எடுப்பதை பார்த்தும்கூட அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
இந்தச்சம்பவம் குறித்து டைஃபி பொன்னமராவதி ஒன்றியப் பொறுப்பாளர் குமார் கூறும் போது, “பொதுமக்கள், அரசின் நலத்திட்டங்களைப் பெற லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால், இப்படி வெளிப்படையாக வாங்கிப் பார்த்ததில்லை. விலையில்லா ஆடுகள் வழங்குவதாக பதாகை கட்டி வைத்துவிட்டு, அதன் அருகிலேயே இருந்து பணம் வாங்கிய கொடுமையைப் பார்த்து எங்கள் நண்பர் வீடியோ எடுத்துள்ளார். அதைப்பார்த்தவர்கள் கொஞ்சம்கூட அசரவில்லை. இவர்கள் வாங்கிய லஞ்சம் யாருக்கெல்லாம் போகிறது என்பதை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிப்படையாக லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் மற்றும் தளப்பணியாளர் மீதும் துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க தவறினால் டைஃபி சார்பில் பெரிய போராட்டம் நடத்தவும் தயாராகி வருகிறோம்” என்றார்.
இது குறித்து, ஊ.ம.தலைவர் பழனிச்சாமி, “அரசு ரூ.10 ஆயிரம் மட்டும் ஒதுக்கியுள்ளது. இந்தப் பணத்தில் 3 ஆடு, ஒரு கடாய் வாங்க முடியாது. அதனால், பயனாளிகள் ரூ.2 ஆயிரம் கொடுத்தால்தான் அரசு சொன்னபடி ஆடுகள் கொடுக்கலாம் என்று ஆடு வியாபாரி சொன்னதால்,கால்நடை துறை அலுவலர்கள், பயனாளிகளிடம் பேசினார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_67.jpg)
அதற்குப் பயனாளிகளும் சம்மதித்துப் பணம் கொடுத்தார்கள். ஆனால், ஆடுகள் சிறியதாக இருப்பதாக பலர் விலை குறைக்க சொன்னார்கள். வியாபாரி ஒத்துக் கொள்ளவில்லை. பிறகு பயனாளிகள் விருப்பத்திற்கே பணத்தைக் கொடுத்து ஆடுகளை வாங்கிச் சென்றார்கள். இந்தப் பணம் ரூ.2 ஆயிரத்தைப் பிறகு கால்நடைத்துறை அரசிடம் இருந்து வாங்கித் தருவதாக பயனாளிகளிடம் சொன்னார்கள். ஆடுகளுக்கு கொட்டகையும் அமைத்துத் தருவதாக சொன்னார்கள். இதில் முறைகேடுகள் நடக்கவில்லை” என்றார்.
பணம் வாங்கிய ஊராட்சி செயலர் சின்னக்காளை, “கால்நடைத்துறை ஏடி மற்றும் ஒலியமங்கரம் கால்நடை மருத்துவர் ஆகியோர் 132 பயனாளிகளிடமும் ஆடுகள் விலை அதிகமாக இருப்பதாக, ஆடு வியாபாரி சொன்னதால்,ரூ.2 ஆயிரம் கொடுத்து வாங்கிட்டுப் போங்கன்னு சொன்னாங்க. ஆடு கொடுக்கிற நாளில், ஆடுகள் வர தாமதம் ஏற்பட்டதால, என்னை பணம் வாங்கச் சொன்னாங்க வாங்கினேன். ஆடுகள் வந்ததும் ஆடு பிடிக்கவில்லை என்று சொன்னதால, பணத்தை உரியவர்களிடமே கொடுத்துட்டேன். அதன் பிறகு ஆடு வியாபாரியே பயனாளிளிடம் பேசி பணம் வாங்கிக் கொண்டார்கள். இதற்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)