
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக பருவம் தவறிப் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான நெல் பயிர்கள் சுமார் 15 லட்சம் ஏக்கர்களுக்கு மேலாக தண்ணீரில் மூழ்கி நாசமாகின.அதேபோல மிளகாய், கடலை, உளுந்து செடிகளும் நாசமாகியுள்ளது. பருவம் தவறிப் பெய்த மழையால் ஏற்பட்ட இழப்பிற்கு பேரிடராக அறிவித்து ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை கேட்டு விவசாயிகள் ஆங்காங்கே மறியல் போராட்டங்ளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பயிர் சேதங்களை வருவாய் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் மூலம் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக அரசும், ஆட்சியர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு விவசாயியும் சேதமான தன் வயலில் நின்று படம் எடுத்து அத்துடன் சிட்டா, பாஸ்புக், ஆதார் நகல் என ரூ.200 வரை செலவளித்து கிராம நிர்வாக அலுவலகங்களில் விண்ணப்பம் கொடுத்து வருகின்றனர். இப்படி எல்லாவற்றையும் இழந்து நிவாரணத்திற்காக விண்ணப்பிக்க அரசு சொன்ன ஆவணங்களுடன் செல்லும் விவசாயிகளிடம் வருவாய்துறை அதிகாரிகள் ரூ.200 லஞ்சமாக பெற்று வருகின்றனர். இது "வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதாக" உள்ளதாக கூறுகிறார்கள் விவசாயிகள் வேதனையாக.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவில் உள்ள பல கிராமங்களில் இதுபோல பணம் வசூல் நடப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில், கொடிவயல் கிராமத்தில் அந்த கிராம நிர்வாக அலுவலர் வேம்பரசியே விவசாயிகளிடம் ரூ.200 வாங்குவதும், இது டைப் படிவாங்குவதாக காரணமும் சொல்லிக் கொள்கிறார். இவை அனைத்தையும் வீடியோ பதிவு செய்த இளைஞர்கள் சமூகவலைதளங்களில் பரப்பி வருகின்றனர். ஆனால் அதே தாலுகாவில் உள்ள சில கிராம நிர்வாக அலுவலர்களிடம் கேட்டால், அப்படி யாரிடமும் பணம் வசூல் செய்யக் கூடாது. டைப் செய்ய தாலுகா அலுவலகத்தில் அதற்கான பணியாளர்கள் உள்ளனர் என்கிறார்கள்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம். விரைவில் நடவடிக்கையை எதிர்பார்க்கலாம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)