Skip to main content

ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.200 லஞ்சம்... வீடியோவில் சிக்கிய அதிகாரி!

Published on 09/01/2022 | Edited on 09/01/2022

 

 Rs 200 bribe for a ration card ... govt officer video released

 

தமிழகத்தில் பலதுறைகளிலும் சாதாரண மக்களிடம் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதிகளில் பொதுமக்கள் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், பெயர் நீக்குதல், பெயர் சேர்த்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் செய்வதற்காக ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகத்திற்குச் சென்றால் ஒவ்வொரு பணிக்கும் ஒரு விலை வைத்து வசூல் நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

 

ஆவுடையார்கோவில் வட்ட வழங்கல் அலுவலர் முருகேசன் பொதுமக்களிடம் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு ரூ.1,000, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் செய்வதற்கும் ரூபாய் 500, 200 என விலை நிர்ணயம் செய்து வசூலித்து வருவதாகப் புகார்கள் எழுந்தது. நேற்று சனிக்கிழமை குடும்ப அட்டைகள் பெயர் திருத்தம் செய்வதற்காக ஆவுடையார்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ. 200 லஞ்சம் வாங்கி தன் சட்டைப் பாக்கெட்டில் வைக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

கரோனா தொற்றால் 2 வருடமாக வருமானமின்றி அவதிப்பட்ட பொதுமக்கள் தற்போது கரோனா, ஒமைக்ரான் தொற்று அதிகரிப்பு காரணமாக மீண்டும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதித்திருப்பதால் சிரமத்தில் உள்ள நிலையில், இது போன்ற லஞ்ச அதிகாரிகளால் ரொம்பவே  நொந்து போய் உள்ளனர் பொதுமக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.