
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 30 ஆயிரம் ஹெக்டர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. தண்ணீரில் வீடு மூழ்கிப் பாதிப்படைந்த 410 குடும்பங்களுக்கு ரூ.2,000 நிவாரணம் வழங்கப்படவுள்ளது என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புயல் காரணமாக அதீத கனமழையால் 30 ஆயிரம் ஹெக்டர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மேலும் சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் மழைநீரில் சேதமடைந்தன , தொடர்ந்து சுமார் 350-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன. தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முதலே பள்ளிகள் இயக்கப்பட்டு வருகின்றது. திருக்கோவிலூரில் மட்டும் இரண்டு பள்ளிகள் விடுமுறையில் உள்ளன.
தென்பெண்ணை ஆற்றில் வந்த வெள்ளத்தால் கள்ளக்குறிச்சி மாவட்டம் , மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீரில் மூழ்கின அங்கு முழு வீச்சில் மீட்புப் படையினர் பணிகளை மேற்கொண்டு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூங்கில்துறைபட்டு, திருக்கோவிலூர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட வீட்டுமனை பட்டா சான்றிதழ்கள் வழங்கச் சிறப்பு முகாம் நடத்தி அதில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட ஆவணங்கள் சான்றிதழ்கள் உள்ளிட்டவை உடனடியாக வழங்க முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மேலும் முதலமைச்சரின் சிறப்பு அறிக்கையின்படி முழுமையாக இரண்டு நாட்களுக்கு மேல் தண்ணீரில் மூழ்கப்பட்ட வீடுகளுக்கு பாதிக்கப்பட்ட 410 குடும்பங்களுக்கு 2000 ரூபாய் வழங்கும் பணிரேஷன் கடை மூலமாக வழங்கப்பட உள்ளது. மேலும் 30 ஆயிரம் ஹெக்டர் தண்ணீரில் மூழ்கிய விவசாய நிலங்களை வேளாண்துறை மற்றும் வருவாய் துறை பார்வையிட்டு நிவாரணம் வழங்க உள்ளோம்”எனத் தெரிவித்துள்ளார்.