Rs. 2 thousand crore abuse ..! High Court order to the Government of Tamil Nadu

Advertisment

தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முறைகேடாக தனிநபர்களுக்கு விற்பனை செய்ய உடந்தையாக இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது உரிய விசாரணை நடத்தக் கோரிய மனு மீது விசாரணை நடத்தி ஆறு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, வக்பு வாரிய பாதுகாப்புக்குழு அறக்கட்டளை அமைப்பின் தலைவரான மதுரை கட்ராபாளையம் தெருவைச் சேர்ந்த எம்.அஜ்மல்கான் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழ்நாடு வக்பு வாரியத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் அன்வர்தீன், வக்பு வாரியத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியும், தற்போதைய ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் முகமது அஸ்லம், ஓய்வு பெற்ற முதன்மை செயல் அதிகாரி ரசீத் அலி, வக்பு வாரிய கண்காணிப்பாளர் லியாகத் அலி, ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் நூருல்லா, இளநிலை உதவியாளர் முகமது ஆலிம் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் வக்பு வாரிய உறுப்பினர்கள் மற்றும் இதர ஊழியர்களுடன் கூட்டு சேர்ந்து 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வக்பு வாரிய சொத்துக்களுக்கு ஆட்சேபனையில்லா சான்றிதழ் வழங்கி தனிநபர்களுக்கு விற்பனை செய்ய உடந்தையாக செயல்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, வக்பு வாரிய சொத்துக்களை மீட்கக்கோரி தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின நலத்துறை முதன்மை செயலாளர், தற்போதுள்ள வக்பு வாரிய தலைமை செயல் அதிகாரி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வக்பு வாரிய சொத்துக்களை முறைகேடாக தனிநபர்களுக்கு விற்பனை செய்ய உடந்தையாக இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், மனுதாரரின் கோரிக்கை மனு மீது ஆறு வாரங்களுக்குள் விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.