கோவையில் உள்ள தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழகத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை துணைவேந்தராக முருகேச பூபதி என்பவர் பதவி வகித்து வந்தார். இவர் தன்னுடைய பதவிக் காலத்தில் பல்கலைக்கழகத்திற்காகக் கரும்பு அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டது. அதாவது நிபுணர்களின் அறிவுரையை மீறி இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் குறிப்பிட்ட தனியார் நிறுவனம் 2 கோடியே 77 லட்சம் ரூபாய் அளவுக்கு லாபம் அடைந்ததாகவும், எனவே அரசுக்கு 2 கோடியே 77 லட்சம் ரூபாய் தொகை இழப்பு ஏற்படுத்தியதாகவும் திருப்பூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று முன்னாள் துணைவேந்தர் முருகேச பூபதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த கோவை நீதிமன்றம் இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனு நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வில் இன்று (09.07.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது, “அரசு ஊழியராக இருந்த முன்னாள் துணைவேந்தருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றால் அரசின் ஒப்புதல் அவசியம். ஆனால் அவ்வாறு எந்த ஒப்புதலும் பெறாமல் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு நிலைக்கத்தக்கது அல்ல” என முன்னாள் துணைவேந்தர் முருகேச பூபதி தரப்பில் வாதிடப்பட்டது.
இருப்பினும் இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி “பல்கலைக்கழக சட்டத்தின்படி துணைவேந்தரை பணிநீக்கம் செய்வதற்கு அரசின் முன் அனுமதி தேவையில்லை என்பதால் அவருக்கு எதிராக வழக்கு தொடரவும் அரசினுடைய முன் அனுமதி தேவையில்லை” எனக் கூறினார். அதோடு இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு கடந்த 2012ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு என்பதால் இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று கோவை சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/09/hc-2025-07-09-18-48-27.jpg)