Skip to main content

லட்ச ரூபாய் கடனுக்கு கோடி ரூபாய் வட்டியாம்... உணவக அதிபரை கடத்திய கந்துவட்டி பெண்

Published on 15/10/2022 | Edited on 15/10/2022

 

Rs 1.42 crore interest on a loan of 24 lakhs... The  woman who kidnapped the restaurant owner!

 

சேலத்தில் 24 லட்சம் ரூபாய் கடனுக்கு 1.42 கோடி ரூபாய் வட்டி, அபராத வட்டி என 1.42 கோடி ரூபாய் திருப்பிக் கேட்டு, உணவக அதிபரை கடத்திச்சென்ற கந்துவட்டி பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

சேலம், சூரமங்கலம் புது சாலை ரவி நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (41). அப்பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இத்துடன், பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவருடைய மனைவி அன்பரசி (36). ஹோமியோபதி மருத்துவர். இந்நிலையில், சூரமங்கலத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சரண்யா என்பவருடன் சுப்ரமணியனுக்கு தொழில் ரீதியாக பழக்கம் ஏற்பட்டது. இந்த நட்பின் அடிப்படையில் சில ஆண்டுக்கு முன்பு, சரண்யாவிடம் 24 லட்சம் ரூபாயை மாதம் 20 ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். 

 

இதற்காக வட்டி மட்டுமே இதுவரை சுப்ரமணியன் 96 லட்சம் ரூபாய் திருப்பிச் செலுத்தி உள்ளார். ஆனாலும், மாதம் 30 சதவீதம் வட்டி கணக்கிட்டு, இன்னும் 70 லட்சம் ரூபாய் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று சரண்யா தரப்பினர் கூறியுள்ளனர். அதாவது, 24 லட்சம் ரூபாய் அசல் கடனுக்கு 1.42 கோடி ரூபாய் வட்டி கேட்டுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சுப்ரமணியன், இதற்கு மேல் ஒரு ரூபாய் கூட தர முடியாது எனக் கூறியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அக். 13ம் தேதி காலை சுப்ரமணியத்தின் வீட்டிற்கு சரண்யா உள்ளிட்ட 8 பேர் கார்களில் வந்துள்ளனர். 'திபு திபு'வென்று அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து சுப்ரமணியத்திடம் பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளனர். அங்கு இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த கும்பல் சுப்ரமணியனை குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு காரில் கடத்திச் சென்றுவிட்டது. அப்போது தடுக்க முயன்ற அவருடைய மனைவி அன்பரசியிடம், 70 லட்சம் ரூபாயை உடனடியாக திருப்பிச் செலுத்தாவிட்டால் உன் கணவனை பிணமாகத்தான் பார்க்க முடியும் என்று மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர். 

 

இதையடுத்து அன்பரசி அக். 14ம் தேதி இரவு சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உதவி ஆணையர் நாகராஜன், ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான காவல்துறையினர் புகார் குறித்து விசாரித்தனர். இதில், சுப்ரமணியனைக் கடத்திச் சென்றது சின்னம்மாபாளையத்தைச் சேர்ந்த டேவிட் என்கிற உதயகுமார் தலைமையிலான கும்பல் என்பது தெரிய வந்தது. அந்த கும்பலை தீவிரமாக தேடினர். சூரமங்கலத்தில் உள்ள ஒரு வீட்டில் அவர்கள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. 

 

அவர்களை காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது டேவிட் என்கிற உதயகுமார் (37), ஏற்காடு அடிவாரத்தைச் சேர்ந்த டேவிட்டின் கூட்டாளி குமார் (31) ஆகிய இருவர் மட்டும் பிடிபட்டனர். மற்றவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். அந்த வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த சுப்ரமணியனை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். 

 

பிடிபட்ட இருவரும், ரியல் எஸ்டேட் அதிபர் சரண்யா சொன்னதன் பேரில் ஆள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சரண்யா, அமீர் உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கந்துவட்டி விவகாரத்தில் உணவக அதிபர் கடத்தப்பட்ட சம்பவம், சூரமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்