Skip to main content

"விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000 வழங்கப்படும்!" - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். உறுதி!

Published on 30/07/2021 | Edited on 30/07/2021

 

"Rs 1,000 will be given to family heads soon!" -Minister KKSSR Confident!

 

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “முதலமைச்சரின் உத்தரவின் பேரில் மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுவருகின்றன. தகுதியுள்ள அனைவருக்கும், வெளிப்படைத்தன்மையோடு நிவாரணம் வழங்கப்படும். பெண்களை மையப்படுத்தித்தான் நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.  

 

பெண்களின் கைகளில் கிடைக்கும் நலத்திட்டம், குடும்பத்திற்கு முழுமையாகச் சென்று சேரும். நிதிநிலையை விரைவில் சீர் செய்தபிறகு, குடும்பத் தலைவிகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூபாய் 1,000 வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் தொடங்கிவைப்பார். வீட்டில் குழந்தைகளைத் தனியாக ஆன்லைன் வகுப்பில் படிக்கவைக்கும் நேரத்தில் பெற்றோரும் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளோடு பெற்றோர்கள் அதிகம் பேச வேண்டும்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயபிரபாகரனுக்கு உற்சாக வரவேற்பு; வெற்றியைத் தேடித்தருமா கேப்டனின் அனுதாப அலை?

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Analysis of Vijaya Prabhakaran's chances of winning

நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக கட்சி அதிமுக, பாஜக கட்சிகளுடன் இறுதிக்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. இறுதியாக தேமுதிக கட்சி அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நிறைவு செய்தது. நடைபெறும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. திருவள்ளூர் தனித் தொகுதி, மத்திய சென்னை, விருதுநகர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய 5 சீட்கள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டன. இதையடுத்து வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். 

அதில், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணிக் கட்சி சார்பில் தேமுதிக வேட்பாளராக மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, வேட்புமனு தாக்கலை நிறைவு செய்த விஜய பிரபாகரன் தான் போட்டியிடும் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். விஜய பிரபாகரனின் பூர்விகம் விருதுநகர். தந்தையும் மறைந்த தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்த்தின் சொந்த ஊர் விருதுநகர் என்பதால் அங்கு அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறார் மண்ணின் மைந்தன்.  விஜயகாந்த் பிறந்த ஊர் விருதுநகர் என்பதால் அங்கு தேமுதிகாவிற்கு எப்போதுமே பேராதரவு இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதுவும் கட்சியின் தலைவரின் அனுதாப அலையாலும், விஜயகாந்தின் மகன் என்பதாலும் விஜய பிரபாகரன் எளிதில் வெற்றி பெறுவார் எனக் கூறப்படுகிறது.

விருதுநகர் மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை, பாஜக சார்பில்  நடிகை ராதிகா சரத்குமார், தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் போட்டியிடுவதால், அது ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது. தற்போது, சிட்டிங் எம்பியான காங்கிரசின் மாணிக்கம் தாகூரே மீண்டும்  விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் களம் காண்கிறார். விருதுநகர் தொகுதி குறித்து தேமுதிகவினர் பேசுகையில், விஜய பிரபாகரன் மண்ணின் மைந்தர். விருதுநகர்தான் அவரின் பூர்விகம். விருதுநகர் மக்களும் விஜய பிரபாகரனை தங்கள் வீட்டு பிள்ளையாக பார்க்கிறார்கள். அதனால் விருதுநகரில் விஜயபிரபாகரன் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. விஜய பிரபாகரன் நீண்ட ஆண்டுகளாக மக்கள் சேவை, அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருபவர். மறைந்த தலைவர் விஜயகாந்த்தின் மகனான விஜய பிரபாகரன், தந்தை எதிர்கொண்ட சவால்களையும் பார்த்து வளர்ந்தவர். சொந்த தொகுதியான விருதுநகர் தொகுதியைச் சிறப்பாக கொண்டு வரவேண்டும் என்பதுதான் அவருடைய ஒரே நோக்கம். இப்போதே விருதுநகரில் தங்கி மக்கள் பணிகளை மேற்கொள்ள விஜய பிரபாகரன் வாடகைக்கு வீடு ஒன்றை பார்த்து வைத்துள்ளார்.

அதிமுக தற்போது கூட்டணி அமைத்து இருப்பதால் இந்த முறை தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகசாமாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த முறை அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதிமுக முழு ஒத்துழைப்பு வழங்கினால் வெற்றி நிச்சயம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் தேமுதிக களம் இறங்கியுள்ளது. விருதுநகர் வேட்பாளர் விஜய பிரபாகரன் செல்லும் இடங்களில் எல்லாம் தந்தை வழியில் செயல்படுவேன் என உருக்கமாக பேசி வருகிறார். மேலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, தொடர்ந்து இந்த முறை தேமுதிக விருதுநகரை கைப்பற்ற தேவையான களப்பணிகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

விருதுநகர் மண்ணின் மைந்தன் விஜய பிரபாகரன் போட்டியிடும் முதல் மக்களவைத் தொகுதியில் வெற்றி வாகை சூடுவாரா? என்பதை ஜூன் 4 ஆம் தேதி தான் தெரியும்.  

Next Story

“இனியும் கட்சியில் நீடிக்க முடியாது” - ஆம் ஆத்மி அமைச்சர் அதிரடி ராஜினாமா!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
 Aam Aadmi Party minister resigns and says Can't stay in the party anymore

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து, அவரிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்புச் சலுகையும் காட்ட முடியாது. மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. பொதுவாழ்வில் ஈடுபடும் நபர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து ராஜ்குமார் ஆனந்த் கூறுகையில், “ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் வலுவான செய்தியைப் பார்த்த பிறகு, நான் அதில் சேர்ந்தேன். ஆனால் இன்று, கட்சி ஊழல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தன்னைக் கண்டறிந்துள்ளது. அதனால்தான் நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

ஆம் ஆத்மி ஊழலில் ஆழமாக உள்ளது. மேலும் ஊழல்வாதிகளுடன் என்னால் வேலை பார்க்க முடியாது.  அரசியல் மாறினால் நாடு மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். இன்று அரசியல் மாறவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். எங்களிடம் 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் பட்டியலினத்தவர், பெண்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்த கட்சியில் பட்டியலின எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அனைத்து பட்டியல் இன மக்களும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இதனால், இனியும் நான் கட்சியில் நீடிப்பது கடினம்.” என்றார்.