T. Velmurugan tvk

நெல் ஜெயராமன் அவர்களின் மறைவால் அவரை இழந்து நிற்கும் குடும்பத்தாருக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ரூ.1 லட்சம் வழங்குகிறோம். தமிழக அரசும் அக்குடும்பம் தழைக்க ஆவன செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இயற்கை வேளாண் அறிவியலர், உயிர்ப் பாதுகாவலர் நெல் ஜெயராமன் அவர்களின் மறைவு, மாறாத துக்கத்தில் நம்மை ஆழ்த்தியிருப்பதுடன் பேரதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது. அவருக்கு நம்மை விட்டுப் பிரியும் வயதல்ல; ஐம்பதே வயதிற்குள் அவரை ஆட்கொண்டுவிட்டது அந்தக் கொடிய நோய்.

Advertisment

இந்த ஐம்பது வயதிற்குள் அவர் ஆற்றிய பணிகள் அளவிடற்கரியனவாகும். 174 பாரம்பரிய நெல் வகைகளை அழிவிலிருத்து மீட்டுத் தந்தது மட்டுமல்ல; மரபணு மாற்ற விதை என்னும் எமனிடம் சிக்காமல் வேளாண்மையையே மீட்டுத் தந்திருக்கிறார்.

150க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளைக் கண்டறிந்து அவற்றை விளைவிக்க விவசாயிகளைப் பயிற்றுவித்தது மாத்திரமல்ல; ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி, அதில் பங்கேற்பவர்களுக்கு தலா 1 கிலோ பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கி, லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் ஈடுபட வைத்திருக்கிறார்.

Advertisment

நமது பாரம்பரிய வேளாண்மை மறுமலர்ச்சியையும் அதில் நமது விவசாயிகளுக்கு விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தியதன் மூலம் தான் ஓர் அரிய மனிதர் என்பதை நிறுவிவிட்டுச் சென்றிருக்கிறார் நெல் ஜெயராமன் என்றால் அது மிகையன்று.

தாம் உயிரோடிருந்த காலம் முழுதும் பொதுநலத்திற்காக வாழ்க்கையைச் செலவிட்ட அவரது மறைவு தமிழகத்திற்கே பேரிழப்பு. அவரை இழந்து அவரது குடும்பமும் பரிதவிப்பிற்குள்ளாகியிருக்கிறது. அக்குடும்பத்தாருக்கு ஆறுதலைத் தெரிவிக்கும் அதேநேரம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ரூ.1 லட்சம் நிதியையும் வழங்குகிறோம்.

தமிழக அரசு, நாட்டுக்கு உழைத்த நல்ல மனிதர்களை கவுரவித்துப் போற்றும் கடப்பாட்டினைக் கடைப்பிடித்துவருவதை நாம் அறிவோம். அந்த வகையில் நமது பாரம்பரிய இயற்கை வேளாண்மைக்கு புத்துயிர் அளித்து அது தழைக்க அரும்பாடுபட்ட நெல் ஜெயராமன் அவர்களை தமிழக அரசு நிச்சயம் மனதிற் கொள்ளுமாக!

பொதுநலம் பேணும் புண்ணியவான்களுக்கு மரியாதை செய்யும்முகமாக, நெல் ஜெயராமன் அவர்களை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தார் தழைத்திட ஆவன செய்ய வேண்டுமாய் அரசை நாம் அன்புடன் வேண்டிக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.