சிதம்பரம் அருகே பரங்கிபேட்டை பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் பிரதமந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 188 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதில் கம்பி உள்ளிட்ட தளவாட பொருட்கள் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ரூ. 1 கோடி மேல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில் கடலூரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளராக பணியாற்றியவரான (தற்போது சென்னையில் கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றிவருகிறார்) எட்வின் சாம் மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், கடலூர் கோட்ட உதவி பொறியாளராக பணியாற்றியவரும் தற்போது காஞ்சிபுரத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றிவரும் ஜெயக்குமார் ஆகிய 2 அதிகாரிகளும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எட்வின் சாம் என்பவர் வருகின்ற வரும் 31-ந் தேதி ஒய்வு பெற உள்ள நிலையில் தற்போது அவர் மீது தற்காலிக பணி நீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.