Advertisment

ரவுடி கொலையில் கூலிப்படையினர் கைது; 'மூளை'க்கு வலைவீச்சு! 

Rowdy passes away police arrested two in salem

Advertisment

சேலத்தில், ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலிப்படை கும்பலைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கொலைக்கு மூளையாகச் செயல்பட்ட நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சேலம் அன்னதானப்பட்டி அம்பாள் ஏரி சாலையைச் சேர்ந்தவர் ரஞ்சித் என்கிற ரஞ்சித்குமார் (29). ரவுடி. இவர் மீது பல குற்ற வழக்குகள் ஏற்கனவே பதிவாகி உள்ளன. இதனால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த 15 நாள்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இதையடுத்து, சேலத்தை அடுத்த மாசிநாயக்கன்பட்டியில் தனது இரண்டாவது மனைவி பிரியாவுடன் வசித்து வந்தார். மே 3ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ரஞ்சித், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பிரியாவும், உறவினர்களும் தேடிப் பார்த்தனர். அவர் எங்கு சென்றார் எனத் தெரியவில்லை. அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.

Advertisment

இந்நிலையில், உடையாப்பட்டி வேடியப்பன் கோயில் எதிரில் உள்ள 3 அடி ஆழமுள்ள சாக்கடை பள்ளத்தில் ரஞ்சித் கொலை செய்யப்பட்டுக் கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அம்மாபேட்டை காவல்நிலைய காவல்துறையினர், சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரஞ்சித்தை மர்ம நபர்கள் கழுத்தில் பாட்டிலால் குத்திக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

ஆய்வாளர் கணேசன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், பெண் விவகாரத்தில் ரஞ்சித்தை கொலை செய்திருப்பது தெரியவந்தது. சம்பவத்தன்று அவரை தாதகாப்பட்டியைச் சேர்ந்த மகேந்திரன் (27), சங்ககிரியைச் சேர்ந்த புகழேந்தி (30) ஆகியோர்தான் வீட்டில் இருந்து அழைத்துச் சென்றனர் என்பதையும், அவர்கள்தான் ரஞ்சித்தை கொலை செய்தனர் என்பதையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுபற்றி காவல்துறை தரப்பில் விசாரித்தோம். ''கொல்லப்பட்ட ரவுடி ரஞ்சித்தின் முதல் மனைவி, கணவரின் நெருங்கிய உறவுக்கார ஆண் ஒருவருடன் நெருங்கிப் பழகி வந்தார். இதில், அவர்களுக்குள் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், அந்த உறவுக்கார நபருடன் முதல் மனைவி போய்விட்டார்.

இதன்பிறகுதான் ரஞ்சித், பிரியாவை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு, மாசிநாயக்கன்பட்டியில் தனிக்குடித்தனமாக இருந்து வந்தார். ரஞ்சித்தின் முதல் மனைவியை அபகரித்த அதே உறவுக்கார நபர், தற்போது பிரியாவுடனும் நெருங்கிப் பழக முயற்சி செய்து வந்துள்ளார். இந்த விவகாரம், ரஞ்சித்திற்கு தெரியவந்ததும், அந்த நபரை எச்சரித்துள்ளார்.

இதனால் அந்த உறவினர், எப்படியும் ரஞ்சித் இனி தன்னை விட்டு வைக்க மாட்டார் எனக்கருதினார். இதனால் மகேந்திரன், புகழேந்தி ஆகிய கூலிப்படையினரை வைத்து அவரை தீர்த்துக்கட்டி விட்டார். இந்த கொலையில் மூளையாகச் செயல்பட்ட நபரும் விரைவில் பிடிபடுவார்'' என்கிறார்கள் காவல்துறையினர்.

police Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe