Rowdy passed away police investigation

கடலூர் மாவட்டம், நெய்வேலி வட்டம் 30-ல் உள்ள பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் வீரமணி(43). இவருக்கு செல்வி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். வீரமணி மனைவி செல்வி குழந்தைகளுடன் வட்டம்-21 பகுதியில் தனது மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார். பிரபல ரவுடியான வீரமணி மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என பல்வேறு காவல் நிலையங்களில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

Advertisment

இந்நிலையில் நேற்று நள்ளிரவு வீரமணி வட்டம் 30ல் உள்ள தனது அம்மா வீட்டின் முன்பு உள்ள தாழ்வாரத்தில் படுத்துத் தூங்கியுள்ளார். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வீரமணி வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடிரென்று வீரமணியை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

Advertisment

மகனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் வீரமணி உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து நெய்வேலி தெர்மல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நெய்வேலி டி.எஸ்.பி ராஜேந்திரன், நெய்வேலி தெர்மல் காவல் ஆய்வாளர் லதா மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் வீரமணி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நெய்வேலியில் முக்கிய ரவுடியாக வலம் வந்த வீரமணி மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் அவரை, அவரது கூட்டாளிகள் கொலை செய்திருக்கலாம் என்கிற கோணத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.