Rowdy goondas act jail salem police

Advertisment

சேலத்தில் வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

சேலம் அருகே உள்ள கருப்பூரைச் சேர்ந்த சரவணன் மகன் கவுதம் (வயது 24). இவர் மீது காவல்துறையில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.இவர், கடந்த பிப்ரவரி மாதம் குடிபோதையில் ஒரு வீட்டுக்குள் புகுந்து, பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இதையடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை கருப்பூர் காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

பிணையில் வெளியே வந்த கவுதம், கடந்த மே மாதம் 25- ஆம் தேதி, கருப்பூர் அருகே குண்டூரில் உள்ள ஓர் உணவகத்தில் ரகளையில் ஈடுபட்டதோடு, அதன் உரிமையாளரை மது பாட்டிலால் தாக்கி, கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதுகுறித்த வழக்கு விசாரணையில் உள்ளது.இச்சம்பவம் நடந்த அடுத்த இரு நாட்களில், வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த பச்சியப்பன் என்பவர், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி அருகே நடந்து சென்றபோது, அவரை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, 3000 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

Advertisment

இந்த சம்பவம் நடந்த அன்றே கவுதமை, காவல்துறையினர் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கருப்பூர் காவல் ஆய்வாளர் மற்றும் துணை ஆணையர் மாடசாமி ஆகியோரின் பரிந்துரையை பேரில், காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார். அதன்பேரில் காவல்துறையினர் ரவுடி கவுதமை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.