Skip to main content

அதிகரித்துவரும் பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டி கொண்டாடும் கலாச்சாரம்!

Published on 29/05/2019 | Edited on 29/05/2019

சமீப காலமாக கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் ரவுடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி கத்தி வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுபவர்களை போலீசும் கைது செய்து வருகிறது. ஆனால் இந்த கத்தி கேக் கலாச்சாரம் தமிழகம் முழுவதும் பரவி வருகிறது என்பது போலீஸ் மீதான பயம் குறைந்து உள்ளதே என்பதையே காட்டுகிறது. 

 

mani

 

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட தொழிற்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணி என்கின்ற மணிகண்டன். மைக் செட் அமைக்கும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்று பிறந்த நாள் என்பதால் இன்று அதிகாலை நேரத்தில் கரூர் - திருச்சி சாலையில் தொழிற்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் தனது நண்பர்கள் 10 பேருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். கேக் வெட்டுவதற்கு பெரிய பட்டா கத்தி போன்று ஒரு கத்தியை பயன்படுத்தி கேக் வெட்டி உள்ளார்.
 

இது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து உஷாரான பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மணி என்கின்ற மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் அசோக் ஆனந்த், கார்த்திக் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி பலியான வழக்கு; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Shocking information that came out on A case where a girl was incident on her birthday

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி., கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி, விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமி மான்வி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறுமி மான்வி சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால், மான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

‘எனக்கு பிடித்த சேனல்தான் வைக்க வேண்டும்’ - சிறை வார்டன்களுக்கு ரவுடி கொலை மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 rowdy smashed CCTV cameras in Cuddalore Central Jail

கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை  கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். பிரபல ரவுடி  எண்ணூர் தனசேகரன் இந்த சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக உதவி ஜெயிலரை, அவரது வீட்டில் சிறைக் காவலர் உதவியுடன், ரவுடி  எண்ணூர் தனசேகரன் பெட்ரோல் குண்டு வீசி  எரிக்க முயற்சி செய்தார். 

இவர் மீது இது குறித்து கடலூர் முத்துநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி எண்ணூர் தனசேகரன் பலமுறை சிறை அதிகாரிகளை கண்டித்து போராட்டங்கள் மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடலூர் மத்திய சிறைச்சாலையில் இரவு கைதிகள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது  ரவுடி எண்ணூர் தனசேகரன் தனக்கு பிடித்த சேனலை வைக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு சிறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

மேலும் திடீரென்று சிறை வளாகத்தில் இருந்த சிசிடிவி. கேமராக்களை உடைத்துள்ளார். இது குறித்து கடலூர் முத்துநகர் காவல் நிலையத்தில் சிறைத்துறை அதிகாரிகள்  புகார் அளித்தனர். அதில் எண்ணூர் தனசேகரன் சிறை வளாகத்தில் உள்ள சிசிடிவி. கேமராக்களை உடைத்ததாகவும், சிறை வார்டன்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் இதனை கண்டித்து பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறை வளாகத்தில் நேற்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.