
சேலத்தில் கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த ரவுடியை காவல்துறையினர் 7வது முறையாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சேலம், அஸ்தம்பட்டி அய்யனார் தோட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்தி. இவர் அங்குள்ள அம்மா உணவகம் அருகே கடந்த ஜன. 25ம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த 720 ரூபாய் மற்றும் அலைபேசியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சேலம் மணக்காட்டைச் சேர்ந்த பாலு என்கிற பாலகிருஷ்ணன் (40) என்பவர்தான் வழிப்பறியில் ஈடுபட்டவர் என்பது தெரிய வந்தது. அவரை சம்பவம் நடந்த அன்றைய தினமே கைது செய்தனர்.
இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து வழிப்பறி, கொலை, அடிதடி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததோடு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் சேலம் மாநகர காவல்துறையினர் கைது செய்தனர். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலுவிடம் நேரில் வழங்கினர்.
இவர், ஏற்கனவே கடந்த 2012, 2013, 2016, 2017, 2018, 2020 ஆகிய ஆண்டுகளில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது 7வது முறையாக இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.