பட்டாக்கத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய ரவுடி கைது!

Rowdy arrested for cutting cake

தமிழ்நாட்டில் ரவுடிகள் தங்கள் பிறந்தநாளை நடுரோட்டில் மக்கள் கூடும் இடங்களில் வைத்து தாங்கள் பயன்படுத்தும் பட்டாக்கத்தியில் கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கமாகிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான்,கடந்த மாதம் தமிழ்நாடு முழுவதும் சட்ட ஒழுங்கை சரி செய்ய மாநிலம் முழுவதும் உள்ள ரவுடிகளின் கணக்கெடுக்கப்பட்டு, சோதனை செய்து ஆயிரக்கணக்கான ஆயுதங்களைப் பறிமுதல் செய்து பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை உள்பட பல ஊர்களில் தப்பி ஓடிய ரவுடிகள் தவறி விழுந்து கை, கால்கள் உடைந்துள்ளது.

கை, கால் உடைந்த பகுதிகளில் ரவுடிகளின் ஆட்டம் குறைந்துள்ளது. இந்த நிலையில்தான் கடந்த 6ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் ஜெகதாப்பட்டினம் தங்கபாண்டியன் மகன் அலெக்ஸ் பாண்டியன் (26) தனது கூட்டாளிகளுடன் சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி, அதில் கேக் வைத்து தனது பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இதைப் பார்த்த மக்கள் திகைத்துள்ளனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த அலெக்ஸ் பாண்டியனின் கூட்டாளிகளே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் உலாவவிட்டுள்ளனர்.

மேலும், அந்த வழியாகச் சென்ற வள்ளியம்மை என்ற மூதாட்டியைத் தாக்கியதாக புகார் கொடுத்திருந்த நிலையில், சமூக வலைதளத்தில் வந்த வீடியோவை வைத்து அலெக்ஸ் பாண்டியன் உள்பட 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த ஜெகதாப்பட்டினம் போலீசார் அலெக்ஸ் பாண்டியனை கைது செய்துள்ளனர். ஏற்கனவே அலெக்ஸ் பாண்டியன் மீது 4 கொலை முயற்சி வழக்குகள் பதிவாகி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களால் பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக ஜெகதாப்பட்டினம் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

arrested Pudukottai rowdy
இதையும் படியுங்கள்
Subscribe