rowdies incident salem district sooramangalam police

Advertisment

சேலத்தில் கீழக்கரை ரவுடி ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் சரணடைந்த அண்ணன், தம்பி ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சேலம் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மாயாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் (28). இவரும், இவருடைய நண்பர் தேவகுமார் (24) என்பவரும் கீழக்கரையில் நடந்த எடிசன் கொலை வழக்கில் கைதாகினர். அவர்கள் சேலம் சூரமங்கலம் காவல்நிலையத்தில் தினமும் காலை, மாலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த அக். 25- ஆம் தேதி மாலை அவர்கள் சூரமங்கலம் காவல்நிலையத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு அவர்கள் தங்கியிருந்த விடுதியை நோக்கி நடந்த சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை சுற்றி வளைத்த மர்ம நபர்கள் 3 பேர், கோபிநாத்தை ஓட ஓட விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டினர். அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

Advertisment

இந்தக் கொலை வழக்கில் ரமேஷ்குமார், கார்த்திக், விக்னேஷ் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். எடிசனின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் கோபிநாத் கொல்லப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இச்சம்பவத்தில் எடிசனின் தந்தை அருள்மணி (47), அவருடைய தம்பி அந்தோணிராஜ் (37) ஆகியோர் மூளையாக செயல்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். காவல்துறையின் நெருங்கியதை தொடர்ந்து இருவரும் நவ. 29- ஆம் தேதி முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து அண்ணன், தம்பி இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சேலம் சூரமங்கலம் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.