rowdies goondas act salem district police

சேலத்தில் திருட்டு, வழிப்பறி, லாட்டரி சீட்டு விற்பனை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த நான்கு ரவுடிகளை ஒரே நாளில் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Advertisment

சேலம் கன்னங்குறிச்சி காமராஜர் சாலையைச் சேர்ந்த சரவணன் மகன் கோகுல்நாத் என்கிற கோகுல் (வயது 29). இவர் மீது சின்னத்திருப்பதி பாரதி நகரைச் சேர்ந்த ராஜமகேந்திரன், கன்னங்குறிச்சி சேவி கவுண்டர் தெருவைச் சேர்ந்த பிரேம்குமார் ஆகியோரிடம் கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் வழக்கு உள்ளது.

Advertisment

இந்த வழக்கில் அப்போது கைது செய்யப்பட்ட அவர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பிணையில் விடுதலையான அவர், கடந்த ஜூன் 22- ஆம் தேதி பிரபாகரன் என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 4800 ரூபாயை பறித்துள்ளார். இந்த வழக்கில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியைச் சேர்ந்த காதர் பாட்ஷா மகன் ஜாபர் அலி (வயது 35), கிச்சிப்பாளையம் ஓந்தாபிள்ளைக்காடு பகுதியைச் சேர்ந்த குமார் மகன் கார்த்திக் (வயது 34) ஆகியோரும் பல்வேறு நபர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் அம்மாபேட்டை பெரிய கிணற்றுத் தெருவைச் சேர்ந்த கோபால் மகன் பாலமுருகன் (வயது 45), வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளார்.லாட்டரி சீட்டு என்ற பெயரில் வெள்ளைத்தாளில் போலியாக எண்களை எழுதி, விற்பனை செய்து வந்துள்ளார். அதைத் தட்டிக்கேட்ட ரங்கநாதன் என்பவரை மிரட்டியதோடு, கத்தியால் குத்தி காயப்படுத்தி உள்ளார். இச்சம்பவத்தில் பாலமுருகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோகுல்நாத் என்கிற கோகுல், ஜாபர் அலி, கார்த்திக், பாலமுருகன் ஆகியோர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததோடு, பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் நடந்து வந்துள்ளனர்.இதையடுத்து அவர்கள் நால்வரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல்துறை துணை ஆணையர் மாடசாமி, மாநகர காவல்துறை ஆணையருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில், காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து நான்கு ரவுடிகளும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே குற்ற வழக்குகளின்பேரில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நால்வரிடமும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை காவல்துறையினர் நேரில் வழங்கினர்.

ஒரே நாளில் நான்கு ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது, மற்ற ரவுடிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.