Rotten corpse floating in the boulder ... Villagers in fear

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ளது திருப்பெயர் கிராமம். இந்தக் கிராமத்தில் சாலை அமைப்பதற்காக பாறைகளை உடைத்து தோண்டப்பட்ட பெரிய கல் குட்டை உள்ளது. இந்தக் குட்டையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி எப்போதும் வடியாமல் நிற்கும். இப்பகுதியில் ஆடு, மாடு மேய்க்கச் சென்றவர்கள் அந்தக் கல் குட்டையில் இறங்கி குளிப்பதற்காக சென்றுள்ளனர். அதில் தேங்கியிருந்த தண்ணீரில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக எடைக்கல் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

Advertisment

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், தண்ணீரில் மிதந்த சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக உளுந்தூர்ப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக கிடந்தவர் அதே கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வேட்டைக்காரன் என்கிற செல்வராஜ் என்பது தெரியவந்தது. இவர் கல்குட்டையில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்துவழக்குப் பதிவுசெய்த எடைக்கல் போலீசார், தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். ஊருக்கு ஒதுக்குப்புறமான கல் குட்டையில் ஆண் உடல் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.