Advertisment

எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

roof of Bharathiyar birthplace in Ettayapuram has collapsed, causing a stir

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த இல்லம் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் மகாதேவி என்பவர் காப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த இல்லம் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கும். இங்கு பகுதி நேர நூலகமும் செயல்பட்டு வருகிறது. தினமும் சராசரியாக 500க்கும் மேற்பட்ட நபர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும்.

Advertisment

roof of Bharathiyar birthplace in Ettayapuram has collapsed, causing a stir

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு பார்வையாளர் நேரம் முடிவடைந்தவுடன், இல்லத்தின் உட்பகுதி கதவுகளை அடைத்த காப்பாளர் மகாதேவி, பின்னர் வெளிப்புறம் உள்ள கதவை மூடிய சிறிது நேரத்தில் திடீரென பாரதியார் இல்லத்தின் முன்பக்க மேல்மாடியின் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது. இதனால் தரை தளத்தின் மேற்கூரையும் இடிந்து, அதிலிருந்து கற்கள் மரக்கட்டைகள் விழுந்தன. இதன் காரணமாக பாரதியார் இல்லத்தின் வரவேற்பு அறையில் இருந்த மேஜை, நாற்காலி, புகைப்படங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. அதிர்ச்சியடைந்த காப்பாளர் மகாதேவி உடனடியாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலருக்கும், வருவாய்த்துறைக்கும் தகவல் அளித்தார். எட்டயபுரம் வட்டாட்சியர் சுபா மற்றும் அதிகாரிகள் பாரதியார் நினைவு இல்லத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக வந்து, பாரதியார் இல்லத்திற்கு சென்ற மின் இணைப்பைத் துண்டித்தனர். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன் வந்து பாரதியார் இல்ல சேதத்தை பார்வையிட்டார். இந்த சம்பவம் நடைபெற்ற போது அங்கு யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

Advertisment

roof of Bharathiyar birthplace in Ettayapuram has collapsed, causing a stir

1973-ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த கலைஞர், எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி சி.பா.ஆதித்தனார் தலைமையில் 12.5.1973-ம் தேதி நடந்த விழாவில் பாரதியார் பிறந்த இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து திறந்து வைத்தார். பாரதியார் பிறந்த இல்லத்தில் அவ்வப்போது அரசின் சார்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதன் பழமை மாறாமல் புராதனமாக பராமரிக்கப்பட்டு வந்தது. இங்கு 4 அறைகள் உள்ளன. முதல் அறையில், பணியாளர்கள் மட்டுமே இருப்பர். அங்கேயே பகுதி நேர நூலகத்துக்கான புத்தகங்கள் உள்ளன. 2-வது அறையில், அவர் பிறந்த இடத்தில் மகாகவி பாரதியார் சிலை உள்ளது. 3-வது அறையில், பாரதியார் பயன்படுத்திய பொருட்கள், அவரின் குடும்ப படங்கள் மற்றும் தனிப்பட்ட படங்கள், அவரை பற்றிய செய்தி துணுக்குகள், பாரதியார் நண்பர்கள் படங்கள், பாரதியின் குடும்ப வம்சாவளி பற்றிய விவரம் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டுள்ளன. 4-வது அறையில் புத்தகங்கள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் - மூர்த்தி

tngovt Thoothukudi barathiyar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe