Skip to main content

தென் மாவட்டத்தின் அட்சய பாத்திரம்... உப்புநீரைக் குடிநீராக மாற்றும் அதிசயக் கிணறு!

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

The role of the Southern District .... the miracle well that turns salt water into drinking water!

 

அள்ள அள்ளக் குறையாதது அட்சயபாத்திரம். இது அதிசயமாய் இயற்கையால் மக்களுக்குத் தரப்படும் வரப்பிரசாதம். அப்படிப்பட்ட வரப்பிரசாதம்தான் அந்த அதிசயக் கிணறு.

 

நெல்லை மாவட்டத்தின் திசையன்விளை தாலுகாவில் வரும் கோட்டைக்கருங்குளம் நம்பியாறு அணையிலிருந்து மழை வெள்ளப்பெருக்கால் நிமிடத்திற்கு இரண்டாயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் தாலுகாவின் அக்கம்பக்கக் குளங்கள் நிரம்பின. அதனைத் தொடர்ந்து திசையன்விளையை அடுத்த ஆயன்குளம் படுகை நிரம்பியதுடன், அதன் அருகிலுள்ள ஒரு பாழுங்கிணற்றுக்குள் அணை தண்ணீர் செல்கிறது. 

The role of the Southern District .... the miracle well that turns salt water into drinking water!

 

மழைக் காலம் மற்றும் அணை திறப்பு வெள்ளப்பெருக்கு காலங்களில் இந்தக் கிணற்றுக்குள் எவ்வளவு தண்ணீர் சென்றாலும், குறிப்பாக வெள்ளமே சென்றாலும் மற்றக் கிணறுகள் நிரம்புவதுபோன்று இந்தக் கிணறு நிரம்பியது கிடையாது. எவ்வளவுதான் இந்தக் கிணற்றுக்குள் தண்ணீர் சென்றாலும், அதனை முழுவதும் பூமி உள்வாங்குவதால், இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பல கிராமங்களின் நிலத்தடி நீர் உயர்வதாகவும், அதன் காரணமாக இப்பகுதியின் உப்புநீர் குடிதண்ணீராக மாறுகிறது. எங்களுக்கு உபயோகப்படுகிறது என்கிறார்கள் ஆயன்குளம் கிராம மக்கள்.

 

பெருவெள்ளக் காலங்களில் எத்தனையோ கிணறுகள் நிரம்பினாலும், இந்தக் கிணற்றுக்குள் பெருவெள்ளமே சென்றபோதிலும் நிரம்பியதை நாங்கள் கண்டதில்லை. தனியாருக்குச் சொந்தமானன இந்தப் பாழும் கிணறு எங்களுக்குக் கிடைத்த அட்சய பாத்திரம். இதனால் பல பகுதிகளின் நிலங்களில் ஈரப்பதமிருப்பதால் விவசாயப் பலனும் கிடைக்கிறது என்கிறார்கள்.

The role of the Southern District .... the miracle well that turns salt water into drinking water!

 

இதனிடையே, இதனைக் கேள்விப்பட்ட தொகுதி எம்.எல்.ஏ.வும் சட்டப்பேரவை சபாநாயகருமான அப்பாவு, மாவட்டக் கலெக்டர் விஷ்ணு, மாவட்ட வெள்ளக் கண்காணிப்பு அதிகாரியான செல்வி அபூர்வா உள்ளிட்டோர் கிணற்றை ஆய்வு செய்தனர். சபாநாயகர் அப்பாவு இந்தக் கிணற்றைப் பராமரிக்கும்படி அதிகாரிகளிடம் பணித்திருக்கிறார்.

 

அந்தப் பகுதியின் வரமாகப் பெற்ற இந்த அதிசய அட்சயப் பாத்திரக் கிணற்றை ஏராளமானோர் வாகனங்களில் கூட வந்து பார்த்துச் செல்லுமளவுக்கு ஈர்ப்பை உருவாக்கியிருக்கிறது ஆயன்குளம் கிணறு.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணி; அடிக்கல் நாட்டிய முதல்வர்

Published on 21/08/2023 | Edited on 21/08/2023

 

Construction of seawater desalination plant Aadikal Natya Chief Minister

 

சென்னை மாநகராட்சியின் வளர்ச்சியினைத் தொடர்ந்து சென்னைக்கு அருகில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாலும், பெருகிவரும் வளர்ச்சிக்கேற்ப எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு போதுமான அளவில் குடிநீர் வழங்கும் பொருட்டும், செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

அதன் அடிப்படையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் பேரூரில், 4 ஆயிரத்து 276 கோடியே 44 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு இன்று (21.08.2023) அடிக்கல் நாட்டினார்.

 

இது தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலையமாக அமையவுள்ளது. இந்நிலையம் அமைக்கும் பணி டிசம்பர் 2026க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும்  சென்னை மாநகராட்சிக்கு அருகில் உள்ள 20 ஊராட்சிப் பகுதிகளில் உள்ள 22.67 இலட்சம் மக்கள் பயன் அடைய உள்ளனர்.

 

Construction of seawater desalination plant Aadikal Natya Chief Minister

 

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் இரா.கிர்லோஷ் குமார், சென்னையிலுள்ள ஜப்பான் தூதரகத்தின் துணை தூதர் திரு.தாகா மசாயுகி, இந்தியாவிற்கான ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் தலைமை அலுவலர் திரு.சைட்டோ மிட்சுனோரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

 

Next Story

கேரளாவில் பன்றி காய்ச்சல் தீவிரம்; உஷார் நிலையில் தமிழகம்

Published on 11/01/2023 | Edited on 11/01/2023

 

swine flu in kerala tamil nadu ready to preparedness 

 

பீகார், உத்தராகண்ட், மிசோரம், சிக்கிம், திரிபுரா போன்ற மாநிலங்களில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவி வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் இரண்டு பன்றிப்பண்ணைகள் மற்றும் கோட்டயம் மாவட்டத்தில் ஒரு  பன்றிப்பண்ணை என மூன்று பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

 

கேரளாவில் பன்றி இறைச்சிகள் உணவு புழக்கம் அதிகம் என்பதால் அம்மாநில அரசு பன்றிக்கறி விற்பனைக்குத் தடை விதித்ததுடன், ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு நோய்கள் மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு அங்குள்ள பன்றிகளைக் கொன்று புதைக்கும் படி உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பல பன்றிகள் உயிரிழந்துள்ளன. இந்தச் சூழலில் கேரளாவில் பரவி வருகிற ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் அண்டை மாநிலமான தமிழகத்திலும் பரவிவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

தமிழக - கேரள எல்லையான தென்காசி மாவட்டத்தின் புளியரை சோதனைச்சாவடி அருகே மாவட்டக் கலெக்டர் ஆகாஷ் உத்தரவுப்படி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குனர் பொன்னுவேல், உதவி இயக்குனர் மகேஸ்வரி ஆகியோர் அறிவுறுத்தலின்படி கால்நடை மருத்துவர் ஜெயபால் ராஜா தலைமையிலான குழுவினர் முகாமிட்டு தமிழகத்திற்குள் வருகிற கேரள மாநிலத்தின் பன்றிகள் மற்றும் அவற்றின் கழிவுகள், பன்றியின் உணவுகள் மற்றும் கால்நடைகளை ஏற்றி வரும் வாகனங்களை நுழையவிடாமல் தடுத்து திருப்பி அனுப்புகின்றனர்.

 

மேலும், பறவைக்காய்ச்சலும் அதிகமாகப் பரவுவதால் வாத்து, கோழி முட்டை, கோழிகள் போன்ற இனங்களை ஏற்றி வரும் வாகனங்களும் கேரளாவுக்குள் திருப்பி அனுப்பப்படுகின்றன. மற்ற வாகனங்கள்  தீவிரமாகச் சோதனையிடப்பட்டு கிருமிநாசினி மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்ட பின்பே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. தமிழக - கேரள எல்லையில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியில் 5 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

இதுகுறித்து கால்நடை மருத்துவர் ஜெயபால் ராஜா தெரிவிக்கையில், "கிருமிநாசினி தெளித்த பிறகே தமிழகப் பகுதிக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. தமிழகத்தில் அதிகமான மக்கள் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை. எனவே பன்றி பண்ணைகளும் இங்கு குறைவு" என்றார்.