/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4609.jpg)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு, திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் உள்ள ராபர்ட் பயஸ் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதனை திருச்சி மாவட்ட ஆட்சியர் வழியாக முதலமைச்சருக்கு அனுப்பியும் உள்ளார்.
அந்த மனுவில், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில், ஏறக்குறைய ஒன்றரைஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டேன். சட்டத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், இன்னும் சிறை கொட்டடியில் இருந்து விடுவிக்கப்படவில்லை. சிறப்பு முகாம் எனப்படும் மற்றொரு சிறையில் அடைத்தார்கள்.
திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் நானும், ஜெயக்குமாரும், சாந்தனும், முருகனும், அடைத்து வைக்கப்பட்டுள்ளோம். சிறப்பு முகாம் எனப்படுவது சிறையை விட கொடுமையானதாக இருக்கிறது. இங்கு நடை பயிற்சி செய்வதற்கோ நண்பர்களை பார்ப்பதற்கோ முடியவில்லை. சிறைவாசிகளோடு பழகுவதற்குக் கூட எந்தவித அனுமதியும் வழங்கப்படுவதில்லை. சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து பல மாதங்களாக அறையிலேயே தங்க வைக்கப்பட்டதால் பல நோய்களுக்கு உள்ளானேன்.
எனது உடல் நலத்தை சரி செய்ய நடை பயிற்சி செய்ய அனுமதி கேட்டும் இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இதனால் எனது உடலில் பல நோய்கள் வந்துள்ளது. கடந்த மாதம் திருச்சி அரசு மருத்துவமனை சென்று ஆய்வு செய்தபோது ரத்த அழுத்தம், கொழுப்பு, சிறுநீரகக் கல், மூட்டு வலி, இருப்பதாக மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.
அதனால் கடந்த 22.1.2024 அன்று மீண்டும் மாவட்ட ஆட்சியருக்கு நடை பயிற்சி செய்யவும், விளையாடவும் அனுமதி கேட்டு கடிதம் எழுதியும் இதுவரை எந்தவித பதிலும் இல்லை. இந்த முகாமில் எனது உரிமைகளுக்கோ, உணர்வுகளுக்கோ, எந்த மதிப்பும் இல்லை. அதனால் தான் சாந்தன் உடல்நல குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதே நிலை தொடர்ந்தால் நான்இங்கேயே இறப்பது உறுதி. இதற்கு இங்குள்ள அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்.
அகதிகள் நேரடியாக பிற நாடு செல்வதற்கு இலங்கை அரசு பாஸ்போர்ட் வழங்கிட அனுமதி வழங்கிவருகிறது. அதற்கு இலங்கை தூதரகம் அழைத்து போய் கடவுச்சீட்டு பெறவும் அனுமதி கேட்டுள்ளேன். இதுவரை எந்த பதிலும் கிடைக்காததால் வேறு வழியின்றி இன்று முதல் கால வரையற்ற உண்ணா மறுப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளேன்’ என்று தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)