
பிறந்த புத்தாண்டு யாருக்குக் கொண்டாட்டமோ இல்லையோ, கொள்ளையர்களுக்கு கொண்டாட்டமாகியிருக்கிறது தென்காசியில்.
புத்தாண்டை வரவேற்க நள்ளிரவு 12 மணிக்கு மக்கள் ஆலயங்கள், தேவாலயங்கள், மற்றும் வழிபாட்டுத் தளங்களுக்கு சென்று பிறக்கும் ஆண்டு நல்லபடியாக இருக்க வேண்டும் என்று மனதாரப் பிரார்த்திப்பதுண்டு. அந்த நள்ளிரவில் ஆளில்லாத வீடுகள் அடைக்கப்பட்டிருப்பது இயல்பு. அது தான் கொள்ளையர்களுக்கு வாய்ப்பாகியிருக்கிறது. ஆற அமர கொள்ளையடித்திருக்கிறார்கள் தென்காசி மாவட்டத்தின் சாம்பவர்வடகரை நகரின் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில்.
இந்த ஊரின் ஐயப்பன் கோவில் கீழ் பகுதியில் வசித்து வருகிற மாசிலாமணி, சுரண்டையிலுள்ள பள்ளியின் ஆசிரியர். இவரது அடுத்த வீட்டைச் சேர்ந்தவர் வைகுண்டராஜன். இவர்கள் இரவு 11.00 மணிக்கு தங்களது வீடுகளைப் பூட்டி விட்டுக் குடும்பத்தினருடன், அதே பகுதியில் உள்ள தேவாலயத்தில் நடந்த புத்தாண்டு சிறப்பு பூஜைக்காக சென்றுள்ளனர். பிரார்த்தனை முடிந்து அதிகாலை 03.00 மணிக்கு வீடு திரும்பும் போது வீடுகளின் முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு, உள்ளே பீரோக்களும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தது கண்டு பதறிப் போனார்கள்.
இதில் ஆசிரியர் மாசிலாமணி வீட்டில் 10 கிராம் தங்க நகைகளும், 40 ஆயிரம் ரொக்கமும் மற்றும் வைகுண்ட ராஜனின் வீட்டில் 20 கிராம் தங்க நகை, 5 ஆயிரமும் கொள்ளை போனது தெரிய வந்திருக்கிறது. மற்ற நகைகளை குடும்பத்தினர் புத்தாண்டு பிரார்த்தனைக்காக அணிந்து சென்றதால் அவைகள் தப்பியுள்ளன.
இது குறித்து அவர்களின் புகார்கள் அடிப்படையில் சாம்பவர்வடகரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, உதவி ஆய்வாளர் காசிவிஸ்வநாதன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
புத்தாண்டு இரவில் அடுத்தடுத்து நடந்த புத்தாண்டுக் கொள்ளைச் சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.