நள்ளிரவில் அடுத்தடுத்து கொள்ளை... பீதியில் திணறும் பொதுமக்கள்!

 robbery in the middle of the night public Panic

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி பகுதியில் வசித்துவருபவர் ராஜசேகர். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு தனது மனைவியுடன் புதுச்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். இந்த நிலையில்,நேற்று (24.08.2021) மாலை ராஜசேகரின் வீட்டின் முன்பக்க கதவு திறந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜசேகரின் தாய் மற்றும் உறவினர்களுக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் அனுப்பி, அவர்கள் அங்கு வந்து பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை, வெள்ளிபொருட்கள், பட்டுப்புடவை ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து டி.எஸ்.பி. மணி மொழியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், அருள்செல்வன், ஏழுமலை ஆகியோர் கொண்ட தனிப்படை கொள்ளையர்களைத் தீவிரமாக தேடிவருகிறார்கள். இந்நிலையில், அதே உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரம் பகுதியில் வசித்துவரும் அரசு மருத்துவமனை ஊழியர் சக்திவேல். இவர், தனதுமனைவி பிள்ளைகளுடன் வீட்டின் முன்பக்க கதவைத்திறந்துவைத்து தூங்கிக்கொண்டிருந்துள்ளார். நேற்று அதிகாலை வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், சக்திவேலின் மனைவி ஜானகியின் கழுத்திலிருந்த நான்கரை பவுன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். இதனால் திடுக்கிட்டு எழுந்த ஜானகி கூச்சல் போட, அவரது கணவர் சக்திவேல் எழுந்து அந்த மர்ம நபரைப் பிடிக்கச் சென்றுள்ளார்.

அவர் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றுவிட்டார். அதேபோல், கணேசன் தெருவில் வசித்துவரும் ஆட்டோ டிரைவர் ஜெயசீலன். இவரது மனைவி சுமித்ராவும் அவரது தோழி கயல்விழியும் சுமித்ரா வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், சுமித்ராவின் இரண்டரை பவுன் நகையைப் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை பகுதியில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் இதுபோன்ற நகை பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இது உளுந்தூர்பேட்டையில் வசிக்கும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதனையடுத்து, சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூர் வீ கூட்ரோடு பகுதியில் வசிப்பவர் சிலம்பரசன். இவர், அதே பகுதியில் வெல்டிங் பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

ஒரே வீட்டில் சிலம்பரசனும் அவரது தாயார் மற்றும் பிள்ளைகளுடன் வசித்துவருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சிலம்பரசனின் தாயார் கதவை சாத்திவிட்டு, மொட்டை மாடிக்குச் சென்று படுத்து தூங்கியதாக தெரிகிறது. அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், நள்ளிரவு ஒரு மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த புவனேஸ்வரில் கழுத்தில் இருந்த 7 பவுன் தாலிச் செயினை அறுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். அதைக் கண்டு திடுக்கிட்டு எழுந்த புவனேஸ்வரி சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அவரது கணவர் சிலம்பரசன் நகை பறித்துக்கொண்டு தப்பி ஓடிய நபரை துரத்தி சென்றுள்ளார். ஆனால் மர்ம நபரைப் பிடிக்க முடியவில்லை. இந்த திருட்டு சம்பவம் குறித்து சிலம்பரசன் சின்னசேலம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. ராஜலட்சுமி, சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து, தனிப்படை அமைத்து தாலிச் செயினைப் பறித்துச் சென்ற கொள்ளையனைத் தேடிவருகிறார்கள். இப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் அடுத்தடுத்து தாலி பறிப்பு, வீடு புகுந்து கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்கள் தினசரி நடந்துவருகிறது. கொள்ளையர்களைப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறிவருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த நிலையில் எடைக்கல் போலீசார், பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்புடன் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பது குறித்து அச்சிட்ட துண்டு பிரசுரங்களைக் கிராமங்களில் வழங்கிவருகிறார்கள்.

kallakurichi police Theft
இதையும் படியுங்கள்
Subscribe