Skip to main content

வீடு புகுந்து துணிகர கொள்ளை!

Published on 31/08/2020 | Edited on 31/08/2020

 

robbery

 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகில் உள்ளது திருவக்கரை கிராமம். இந்த ஊரில் பிரசித்தி பெற்ற திருவக்கரை காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் வருகை நிறுத்தப்பட்டுள்ளது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த ஊரைச் சேர்ந்தவர் 50 வயது பழனி. இவர் அதே பகுதியில் ஜல்லி உடைக்கும் குவாரி நடத்தி வருகிறார். 

 

நேற்று முன்தினம் இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு  2 மணி அளவில் அவர் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், பழனி மற்றும் அவரது மகன் விக்னேஷ் ஆகிய இருவரையும் தட்டி எழுப்பி உள்ளனர். அந்த மர்மநபர்கள் கத்தியை அவர்கள் மீது வைத்து குத்தி விடுவதாக மிரட்டி பீரோவைத் திறக்கச் செய்துள்ளனர். பின்னர் பீரோவிலிருந்து 8 லட்சம் பணம் 3 சவரன் நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு அந்த மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். 

 

இவற்றின் மதிப்பு சுமார் 9 லட்சம் என போலீசார் மதிப்பிட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து பழனி மகன் விக்னேஷ் வானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். 

 

மேலும் இது சம்மந்தமாகக் கோட்டகுப்பம் டி.எஸ்.பி அஜய் தங்கமும் சம்பவ இடத்தில் வந்து விசாரணை நடத்தியதோடு கொள்ளையர்களை தேடி கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. விழுப்புரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் ராக்கியும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மெயின் ரோடு வரை ஓடி நின்றுவிட்டது. யாரையும் பிடிக்கவில்லை எனவே இந்த கொள்ளைச் சம்பவம் திருவக்கரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக திண்டிவனம், மயிலம், திருவக்கரை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டி வருகிறார்கள். அவர்களைப் பிடிக்க போலீஸ் கடும் முயற்சி செய்து வருகிறது.
 

 

 

சார்ந்த செய்திகள்