
சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பல வீடுகளில் நகைகள், பணத்தைத் திருடிய நான்கு பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 83 பவுன் நகைகள், ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சேலம் அங்கம்மாள் காலனி பழனி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் அரவிந்த் (25). சேலத்தில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன. 18) இரவு சேலம் லீ பஜார் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளது. மர்ம நபர்கள் அவரிடம் கத்தி முனையில் 2 ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்து அரவிந்த், பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த வழிப்பறிச் சம்பவத்தில் சேலம் சினிமா நகரைச் சேர்ந்த பாண்டியன் (35) மற்றும் அவருடைய கூட்டாளிகள் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. சந்தேகத்தின் பேரில் பாண்டியனை புதன்கிழமை (ஜன. 19) காவல்துறையினர் கைது செய்தனர்.
அவருடைய கூட்டாளிகளான ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் குமார் (30), தீவட்டிப்பட்டி கோவிந்தன் மகன் அண்ணாமலை (37), திருவண்ணாமலை ரயில்வே ஸ்டேஷன் தெருவைச் சேர்ந்த சங்கர் (40) ஆகியோரையும் ஜன. 19ல் கைது செய்தனர். இவர்கள் நால்வரும் சேலம் மாநகரம், சேலம் மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 11 வீடுகளில் நகை, பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்திருப்பது தெரிய வந்தது.
கடந்த செப்டம்பர் மாதம் பள்ளப்பட்டியில் ஒரு நகைக்கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து, அதிலிருந்த 11 பவுன் நகைகளையும் இந்த கும்பல்தான் திருடியிருப்பது தற்போது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், பணத்தை பாண்டியன் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். அதன்பேரில் பாண்டியன் வீட்டில் நடத்திய சோதனையில் 83 பவுன் நகைகள், 2.50 கிலோ வெள்ளி பொருள்கள், 1.25 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை காவல்துறையினர் மீட்டனர்.
பிடிபட்டுள்ள பாண்டியன் மீது மட்டும் கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 20 குற்ற வழக்குகள் பல்வேறு காவல்நிலையங்களில் விசாரணையில் இருக்கின்றன. ஏற்கனவே இரண்டு முறை குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு உள்ளார்.
நீதிமன்ற உத்தரவின்பேரில் நால்வரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.