
அருப்புக்கோட்டை, எம்.டி.ஆர். வடக்கு 2- வது தெருவில் பட்டப்பகலில், ஆசிரியர் தம்பதியினரைக் கொலை செய்து, மிளகாய்ப்பொடி தூவி நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சங்கரபாண்டியன்- ஜோதிமணி தம்பதியர் ஓய்வுபெற்ற ஆசிரியர்களாவர். சென்னை, வேளச்சேரியில் இவர்களுடைய மகன் சதீஷ் குடும்பத்துடன் வசிக்கிறார். அங்கு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இந்நிலையில், சங்கரபாண்டியனையும், ஜோதிமணியையும் அவர்களது உறவினர்கள் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டுச் செல்வார்கள். வழக்கம்போல் நேற்று (18/07/2022) சங்கரபாண்டியன் வீட்டுக்கு உறவினர்கள் வர, அங்கே ரத்த வெள்ளத்தில் இருவரும் கிடந்துள்ளனர்.
அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தந்தனர். அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலைய போலீசார் அங்கு வந்தபோது, சங்கரபாண்டியனும் ஜோதிமணியும் அடித்துக் கொல்லப்பட்டு, வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்துள்ளன. அந்த வீடு முழுவதும் மிளகாய்ப்பொடி தூவப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, விருதுநகரிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். போலீசார் தடயங்களைச் சேகரித்தனர். இரு சடலங்களையும் காவல்துறையினர் கைப்பற்றி, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
மர்ம நபர்கள் ஆசிரியர் தம்பதியரைக் கொலை செய்துவிட்டு, நகை, பணத்தைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. சம்பவ இடத்துக்கு நேரில் வந்த டி.ஐ.ஜி. பொன்னி மற்றும் விருதுநகர் மாவட்ட எஸ்.பி. மனோகர் விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய் மூலமும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் வாயிலாகவும், விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கொலையாளிகளை கண்டுபிடிக்க விருதுநகர் மாவட்ட எஸ்.பி. மனோகர் 7 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை முடுக்கிவிடப்பட்டு கொலையாளிகளைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)