
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ளது வானதிராயபுரம். இந்தக் கிராம பஸ் ஸ்டாப் அருகில் கடந்த 3ஆம் தேதி ஒரு தம்பதி அவ்வழியே சென்றவர்களிடம் நகைபறிக்க முயன்றனர். அவர்களைச் சுற்றிவளைத்துப் பிடித்த பொதுமக்கள் வடலூர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதி சௌடேஸ்வரி நகரைச் சேர்ந்த கணவன் மனைவி அவர்கள் இருவரும் என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் இதேபோன்று பல்வேறு பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு இருப்பதும் தெரியவந்தது.
அந்த இருவரையும் கடந்த 4ஆம் தேதி கடலூர் சிறைக்கு அனுப்புவதற்கு முன்பு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு அவர்கள் இருவரையும் நீதிமன்றம் மூலம் சிறைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று அந்தப் பெண் கைதிக்குக் கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தத் தகவல் பரவியதும் அந்தப் பெண்ணைப் பிடித்துக் கொடுத்த பொதுமக்களும் வடலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் 20க்கு மேற்பட்ட காவலர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதையடுத்து வடலூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் 20 காவலர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலைய குழுவினர் பரிசோதனை செய்துள்ளனர். மீதியுள்ள போலீசாருக்கும் பரிசோதனை நடைபெற உள்ளது. வடலூர் போலீஸ் ஸ்டேஷனில் கிருமி நாசினி தெளித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அந்தப் பெண்ணைச் சுற்றி வளைத்துப் பிடித்த பொதுமக்கள் நமக்கும் கரோனா தொற்று பரவியிருக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர். திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடக்கூடியவர்களைப் பிடிக்கக் கூட பயப்படும் நிலையை உருவாக்கியுள்ளது இந்தக் கரோனா.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)