திருச்சி மாவட்டம், லால்குடி செம்பரை மாரியம்மன் கோவில் நடு தெருவைச் சேர்ந்தவர் மாலதி. இவர், தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு சாவியை வெளியே உள்ள மறைவான இடத்தில் வைத்துவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார். இதற்கிடையில் மாலதியின் மகன் சரத்குமார், வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டு பீரோவும் திறக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அவர் லால்குடி காவல் துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். இதில் உள்ளே நுழைந்த மர்ம நபர் 9 சவரன் தங்க நகை, 3 ஜோடி வெள்ளி கொலுசு, ஒரு வாட்ச் மற்றும் 2000 ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அந்த மர்மநபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.